×

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 3வது இடத்திற்கு 3 பேர் போட்டி

சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற பொதுத்தேர்தல் நடந்தது. இந்த முறை தேர்தல் களத்தில் திமுக, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், அமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய 5 முனை போட்டிகள் நிலவியது. இந்த அணிகள் சார்பில் 5 பேர் முதல்வர் வேட்பாளர்களாக களம் கண்டனர். திமுக கூட்டணி சார்பில் மு.க.ஸ்டாலின், அதிமுக கூட்டணி சார்பில் எடப்பாடி பழனிசாமி, அமமுக கூட்டணியில் டிடிவி.தினகரன், மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் ஆகியோர் முதல்வர் வேட்பாளர்களாக முன் நிறுத்தப்பட்டனர்.   

5 முனை போட்டி இருந்தாலும் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் திமுக, அதிமுகவே வரும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளது. இதேபோல், டிடிவி.தினகரன், கமல்ஹாசன், சீமான் ஆகியோரில் யார் 3ம் இடத்திற்கு கடும் போட்டியை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கட்சி ஆரம்பித்த பின்னர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன்பிறகு அமமுகவினர் மத்தியில் அவர் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்.

ஆனால், அதன்பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக தோல்வியை சந்தித்தது. ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. இதனால், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து அமமுக தேர்தலை சந்தித்துள்ளது. தேமுதிக-அமமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டது.  டிடிவி.தினகரனும் தான் போட்டியிடும் கோயில்பட்டி தொகுதியை மட்டும் குறிவைத்து தீவிர பிரசாரங்களை மேற்கொண்டார். இதேபோல், நாம் தமிழர் கட்சி 2010ல் தொடங்கப்பட்டாலும் 2016ல் அனைத்து தொகுதிகளிலும் தனித்துபோட்டியிட்ட சீமான் 4 லட்சத்து 58 ஆயிரத்து 104 வாக்குகளை பெற்றார். ஓட்டு சதவீதத்தில் 1.07 சதவீதம் பெற்று 9வது இடத்தை பெற்றிருந்தார்.

இந்த முறை நாம் தமிழர் கட்சியில் 50:50 என்ற முறையில் 117 ஆண், 117 பெண் வேட்பாளர்கள் களம் கண்டனர். தொடர்ந்து தேர்தல் பிரசாரங்களில் அதிமுக அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வந்தார். மேலும், கமலின் மக்கள் நீதி மய்யம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சுமார் 50 சட்டமன்ற தொகுதிகளில் 3வது இடத்தை பிடித்தது. ஆனால், இந்த தேர்தலில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளது. கூட்டணி கட்சியினருக்கு 81 தொகுதிகளை விட்டுக்கொடுத்துள்ளது. குறிப்பாக, தான் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதிக்கு மட்டும் கமல்ஹாசன் முக்கியத்துவம் கொடுத்திருந்தார்.

காலை, மாலை என இடைவிடாது தொடர் பிரசாரங்களை அங்கேயே தங்கி மேற்கொண்டுவந்தார். இதேபோல், 3ம் இடத்திற்கு போட்டியிடும் கட்சிகள் பெரும்பாலும் அதிமுகவின் வாக்குகளையே அதிகம் பிரிக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, டிடிவி.தினகரன் அதிமுகவின் வாக்கு வங்கியை அதிகம் பிரிப்பார் என கருதப்படுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அமமுக 5.5 சதவீதம், நாம் தமிழர் கட்சி 3.89 சதவீதம், மக்கள் நீதி மய்யம் 3.72 சதவீதம் வாக்குகள் பெற்றிருந்தது. எனவே, இந்த மூன்று கட்சிகளில் எந்த கட்சி 3ம் இடத்தை பிடிக்கும் என்பது இன்று இறுதியாகிவிடும்.

Tags : Tamil Nadu Assembly Election 2021 , Tamil Nadu Assembly Election 2021 3 contest for 3rd place
× RELATED தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: சென்னை...