×

கொரோனா நோயாளி, அவரது குடும்பத்தினர் வெளியே சுற்றினால் ரூ.2000 அபராதம்: 2வது முறை சுற்றினால் தனிமைப்படுத்தும் மையங்கள் தயார்; மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபரோ அல்லது அவரது குடும்பத்தினரோ வெளியே  சுற்றினால் முதல் முறை ரூ.2000 அபராதம், மீண்டும் வெளியே சுற்றினால் தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அனுப்பப்படுவார்கள். மேலும் சென்னையில் தேர்தல் முடிவுகள் முழுவதும் தெரிய 20 மணி  நேரம் ஆகும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை, பல்லவன் சாலையில் உள்ள கேந்திரியா வித்யாலயா பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா வைரஸ் தொற்று பாதித்த நபர்களுக்கான முதற்கட்ட உடற்பரிசோதனை மையத்தினை சிறப்பு ஒருங்கிணைப்பு அலுவலரும், வணிக வரித்துறை முதன்மை செயலாளருமான சித்திக் மற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது சிறப்பு ஒருங்கிணைப்பு அலுவலர் சித்திக் நிருபர்களிடம் கூறியதாவது: ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கும், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கும் இடையில் பல்லவன் சாலையில் உள்ள கேந்திரியா வித்யாலயா பள்ளி உள்ளது. எனவே, முதற்கட்ட உடற்பரிசோதனை மையம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் நாள் ஒன்றுக்கு 600 நோயாளிகளை பரிசோதிக்கும் வசதி உள்ளது. தொற்று உறுதியானால், பொதுமக்கள் உடனடியாக பரிசோதனை மையத்துக்கு தான் வர வேண்டும். சென்னையில் ஏற்கனவே 280 ஆம்புலன்ஸ் சேவைகள் இருந்தது. இந்த சேவை தற்போது 350 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக ஆம்புலன்ஸ் வசதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இதையடுத்து மாவட்ட தேர்தல் அதிகாரி, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் இன்றைய தேதியில் 619 முன்கள பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா 2-வது அலையில் சென்னை மாநகராட்சி முன்கள பணியாளர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. போலீசார் 3 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபரோ அல்லது அவரது குடும்பத்தினரோ வெளியே சுற்றினால் முதல் முறை ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மீண்டும் வெளியே சுற்றினால் அவர்கள் தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அனுப்பப்படுவார்கள். இது நேற்று முதல் நடைமுறைக்கு வருகிறது. வாக்கு எண்ணிக்கைக்கு சிறிய தொகுதியான தி.நகரில் 14 மணி நேரமும், பெரிய தொகுதியான கொளத்தூரில் 20 மணி நேரமும் எடுத்துக் கொள்ளும். இதையும் வேகமாக முடிவதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Municipal Commissioner ,Prakash , Corona patient fined Rs.2000 for traveling outside with his family: Isolation centers ready for 2nd round; Corporation Commissioner Prakash warns
× RELATED காலை 5.30 மணி முதல் மாதிரி வாக்குப்பதிவு:...