×

செம்மஞ்சேரி அருகே பரபரப்பு: தக்காளி கூடையால் மறைத்து வேனில் கடத்தி வந்த 600 கிலோ குட்கா பறிமுதல்

துரைப்பாக்கம்: செம்மஞ்சேரி அருகே தக்காளி கூடையால் மறைத்து வேனில் கடத்தி வரப்பட்ட 600 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னை துரைப்பாக்கம்  ராஜீவ்காந்தி சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் உள்ள கடைகளுக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்களை வேனில் கொண்டு விநியோகம் செய்வதாக அடையாறு துணை கமிஷனர் விக்ரமனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவரது தலைமையில் உதவி ஆய்வாளர் செல்வகுமார்,  தலைமை காவலர்கள் வெங்கடேசன், சங்கர் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் நேற்று செம்மஞ்சேரி ராஜீவ்காந்தி சாலை தனியார் கல்லூரி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தபோது,  தக்காளி கூடைகளால் மறைத்து வைத்து  மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்களை கடத்தி  வந்தது தெரியவந்தது. இதனைடுத்து, திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த வேன் உரிமையாளர் சிவலிங்கம் (47), அவரது உதவியாளர் அன்பரசு (32),  டிரைவர் தாழம்பூவை சேர்ந்த பழனி (37) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், வேனில் இருந்து  600 கிலோ புகையிலை பொருட்கள், ரூ. 2 லட்சம் ரொக்கப் பணம், 3 செல்போன்கள்  மற்றும் வேன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்களை  செம்மஞ்சேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர். செம்மஞ்சேரி போலீசார்  3 பேரையும் கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Chemmancheri ,Gutka , Seizure of 600 kg of Gutka smuggled in a van hidden in a basket of tomatoes
× RELATED கர்நாடக மதுபாக்கெட்டுகள் 200 கிலோ குட்கா பறிமுதல்