×

நாளை வெளியாகும் தேர்தல் முடிவுகள்: தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நடைமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்: ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை

சென்னை: வாக்கு எண்ணிக்கையின்போது, வெற்றிக் கொண்டாட்டங்களை நெறிகளுக்கு உட்பட்டு நடத்திட வேண்டும் என, தொண்டர்களை ஓபிஎஸ்-ஈபிஎஸ் கேட்டுக்கொண்டுள்ளனர். கழக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் அறிக்கையில் கூறியதாவது; அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளும், கழகத்தின் மீது பேரன்பு கொண்ட நல்லோரும், 2.5.2021 அன்று சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்படும் போதும், முடிவுகள் அறிவிக்கப்படும் நேரத்திலும், பேரறிஞர் அண்ணா வழியில் அமைதியுடனும்; புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வழியில் விழிப்புடனும், புரட்சித் தலைவி அம்மா வழியில் ஆற்றலுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

கொரோனா பெருந்தொற்று விரைந்து பரவிவரும் சூழலில், அனைவரும் பத்திரமாகவும், பாதுகாப்புடனும் செயல்படுவது இன்றியமையாதது; அது சமூகத்திற்கு நாம் ஆற்ற வேண்டிய கடமையும் ஆகும் என்பதை மறவாதீர்கள். வாக்கு எண்ணிக்கையின் போதும், முடிவுகள் வெளியாகும் வேளையிலும்,  அரசியல் கட்சியினரும், போட்டியிடும் வேட்பாளர்களின் முகவர்களும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கழக உடன்பிறப்புகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். கண்ணியத்திற்கும்,  கட்டுப்பாட்டுக்கும், கடமை உணர்வுக்கும் எடுத்துக்காட்டாகத் திகழும் கழக உடன்பிறப்புகள் ஒரு நொடியும் நெறிகளை மீறிவிடக் கூடாது. வாக்கு எண்ணும் இடங்களுக்கு யார், யார் செல்ல வேண்டும்; வாக்குகள் எண்ணப்படும் இடங்களில் எத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நாளைய நாள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நாளாகையால் அதனை எப்படி முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் நலன் கருதி அனைவரும் அரசுடன் ஒத்துழைத்து, அதிகாரிகளின் வழிகாட்டுதலை ஏற்று கட்டுப்பாட்டுடனும், வெற்றிக் கொண்டாட்டங்களை மிக, மிக அவசியமான நெறிகளுக்கு உட்பட்டும் அடக்கத்துடனும் நடத்திட வேண்டும்.  பட்டாசுகளை வெடிப்பது, வெற்றி ஊர்வலம் போவது போன்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது.  தேர்தல் ஆணையமும், சென்னை உயர்நீதிமன்றமும் நோய் பரவுதலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கூறியுள்ள அறிவுரைகள் அனைத்தையும் கழக உடன்பிறப்புகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

Tags : Electoral Commission ,OPS ,EPS , Election results to be released tomorrow: Follow the guidelines issued by the Election Commission: OBS, EPS report
× RELATED தவறு செய்யும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு