பஞ்சாப் கிங்சிடம் வீழ்ந்து 2வது தோல்வி: 25 ரன்கள் அதிகம் கொடுத்து விட்டோம்..! பெங்களூரு கேப்டன் கோஹ்லி பேட்டி

அகமதாபாத்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு அகமதாபாத்தில் நடந்த 26வது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் கே.எல்.ராகுல் ஆட்டம் இழக்காமல் 57 பந்தில், 7 பவுண்டரி,5 சிக்சருடன் 91 ரன் எடுத்தார். கிறிஸ் கெய்ல் 24 பந்தில் 6 பவுண்டரி,2 சிக்சருடன் 46, ஹர்பிரீத் பிரார் நாட் அவுட்டாக 25 ரன் (17பந்து) எடுத்தனர். பெங்களூரு தரப்பில், ஜேமீசன் 2 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் களம் இறங்கிய பெங்களூரு அணியில் தேவ்தத் படிக்கல் 7 ரன்னில்  மெரிடித்தின் பந்தில் போல்டானார்.  11வது ஓவரை வீசிய ஹர்பிரீத் முதல் பந்தில் விராட் கோஹ்லியை (35ரன்,34 பந்து,3 பவுண்டரி, ஒரு சிக்சர்) வீழ்த்தினார். அடுத்த பந்தில் மேக்ஸ்வெல்லை டக்அவுட் ஆக்கினார். இருவரையும் அடுத்தடுத்த பந்தில் போல்டாக்கிய ஹர்பிரீத், டிவில்லியர்சை 3 ரன்னில் வீழ்த்தி திருப்புமுனை ஏற்படுத்தினார். ரஜத் படிதர் , ஹர்சல் பட்டேல் தலா 31 ரன் எடுத்தனர்.  

பெங்களூரு அணியால் 20 ஓவரில் 8விக்கெட் இழப்பிற்கு 148 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் பஞ்சாப் 34 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் தரப்பில் ஹர்பிரீத் பிரார் 3, ரவி பிஷ்னோய் 2 விக்கெட் வீழ்த்தினர். ஹர்பீர்த்  ஆட்டநாயகன் விருது பெற்றார். 7வது போட்டியில் ஆடிய இந்த அணிக்கு இது 3வது வெற்றியாகும். பெங்களூரு 2வது தோல்வியை சந்தித்தது. வெற்றிக்கு பின் பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் கூறியதாவது: நாங்கள் ஹர்பீரித்தை தயார் செய்து கொண்டிருந்தோம், இது போன்ற ஒரு ஆடுகளத்தில், கடினமான நீளங்களைத் தாக்கக்கூடிய ஒரு சுழற்பந்து வீச்சாளர் தேவைப்படுவது போல் உணர்ந்தோம். அவர் அதைச் சரியாகச் செய்தார், கடைசி நேரத்தில் நன்றாக பேட் செய்தார். அவரின் செயல்பாட்டால் மகிழ்ச்சி அடைகிறோம். சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் பற்றி எனக்கு என்ன சிறிய அனுபவம் இருந்தாலும் அதைப்பற்றி இளம்வீரர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். அவர்கள் அபரிமிதமான திறமைகளைக் கொண்டுள்ளனர், ஆனால் கேப்டனாக சூழ்நிலைகளில் உள்ள அழுத்தங்களுக்கு அவர்களைத் தயார் செய்கிறேன். இந்த வயதில் கெய்ல் விளையாட வேண்டுமா என்று அணிக்கு வெளியே எப்போதும் பேச்சு இருக்கும், ஆனால் அவரைப் போன்ற ஒரு வீரரை பெறுவது என்னவென்று ஒரு கேப்டனாக எனக்குத் தெரியும். அவர் மேலும் மேலும் ஆதிக்கம் செலுத்துகிறார்.

நான் அவருடன் 7-8 ஆண்டுகளாக விளையாடியுள்ளேன், கடந்த சீசன் முதல் அவர் 3வது வரிசையில் பேட் செய்துள்ளார்,  இது அவர் தனது வாழ்க்கையில் இதுவரை செய்யாத ஒன்று, ஆனால் அவர் அணிக்காக அதைச் செய்வார். அந்த மாதிரியான அனுபவத்தை நடுவில் வைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, என்றார். பெங்களூரு கேப்டன் விராட் கோஹ்லி கூறியதாவது: பஞ்சாப் தொடக்கத்தில் நன்றாக ஆடினர். ஒருகட்டத்தில் அவர்களை 116/5 என ஓரளவு பின்னால் இழுத்தோம். ஆனால் 160 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியிருக்கவேண்டும். 25 ரன்கள் அதிகம் கொடுத்துவிட்டோம். கடைசி ஓவரில் நாங்கள் 22 ரன் கொடுத்தோம். அங்கே ஒரு விக்கெட் எடுத்திருக்க வேண்டும். எங்கள் திட்டங்களை எங்களால் செயல்படுத்த முடியவில்லை. ஹர்ஷல் , ஜேமீசன் ரன்களை கொடுத்தாலும் அழுத்தம் அளித்தனர்., பேட்டிங்கில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. நாம் மேம்படுத்த வேண்டிய பகுதிகள் உள்ளன. ரஜத் ஒரு தரமான வீரர். ஆனால் இன்று அவரது நாளாக அமையவில்லை.,என்றார்.

Related Stories:

>