×

திருப்பத்தூர் மாவட்ட ரேஷன் கடைகளுக்கு ரயிலில் 1,251 டன் அரிசி காட்பாடி வந்தடைந்தது: லாரிகளில் பிரித்து அனுப்பப்பட்டது

வேலூர்: திருப்பத்தூர் மாவட்ட ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வினியோகிக்க 1,251 டன் அரிசி காட்பாடிக்கு ரயிலில் வந்தடைந்தது. இவை லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக தஞ்சாவூர் மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கோடைகால சாகுபடியும் விரைவில் தொடங்க உள்ளது.

அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள், அரசு நேரடி கொள்முதல் நிலையம் மூலம் பெறப்பட்டு லாரிகளில் ஏற்றப்பட்டு மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது. கடந்த வாரம் வேலூர் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கான பொது விநியோக திட்டத்தின்படி இலவச ரேஷன் அரிசி வழங்குவதற்காக 2 கட்டமாக 2,251 டன் புழுங்கல் அரிசி அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இதேபோல் நேற்று திருப்பத்தூர் மாவட்டத்திற்கு தேவையான 1,251 புழுங்கல் அரிசி தஞ்சாவூரில் இருந்து காட்பாடிக்கு ரயில் மூலம் கொண்டு வரப்பட்டது.
இவை திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், பச்சூர் ஆகிய இடங்களில் உள்ள வாணிப கிடங்கிற்கு லாரிகள் மூலம் பிரித்து அனுப்பப்பட்டது. தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post திருப்பத்தூர் மாவட்ட ரேஷன் கடைகளுக்கு ரயிலில் 1,251 டன் அரிசி காட்பாடி வந்தடைந்தது: லாரிகளில் பிரித்து அனுப்பப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Tirupattur district ,Vellore ,Katpadi ,Dinakaran ,
× RELATED திருப்பத்தூர் மாவட்ட வனப்பகுதியில்...