கொரோனாவை கட்டுப்படுத்த தேசிய ஊரடங்கு அறிவிப்பதே சிறந்த வழி!: இந்தியாவுக்கு அமெரிக்கா ஆலோசனை..!!

வாஷிங்டன்: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் சில வாரங்களுக்கு தேசிய ஊரடங்கு அறிவிப்பதே சிறந்த வழி என்று அமெரிக்க தலைமை மருத்துவ ஆலோசகர் டாக்டர் அந்தோணி பவுசி தெரிவித்துள்ளார். இந்திய நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள பவுசி, இந்தியாவின் அவசர நிலையை அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைத்து எதிர்கொள்ள இந்தியா முயற்சிகளை தொடங்குமா என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளார். இந்தியாவில் தங்கள் தாய்மார்கள், தந்தையர், சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்காக பலர் ஆக்சிஜனை தேடி அலையும் காட்சிகளை காண முடிந்ததாக பவுசி கூறியுள்ளார். 

இந்தியாவில் அவரச தேவைகளுக்கு உதவும் அரசு இல்லை என்று மக்கள் நினைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியா தற்போதுள்ள நெருக்கடியான சூழலில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது அவசியம் என்றும் தேவைப்படுவோருக்கு மருத்துவ உதவி, தடையில்லா ஆக்சிஜன் தரப்பட வேண்டும் என்றும் அந்தோணி பவுசி குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசி வழங்கும் பணிகள் சில வாரங்களுக்கு முன்னதாகவே தொடங்கப்பட்டிருந்தால் தற்போது ஏற்பட்டிருக்கக்கூடிய தீவிரத்தை குறைத்திருக்க முடியும் என்றும் பவுசி கூறியுள்ளார். 

தற்போதைய அவசர தேவையான ஆக்சிஜன் மருந்துகள், கருவிகள் போன்ற தேவைகளை எப்படி சமாளிப்பது என முடிவு செய்ய போர்க்கால அடிப்படையில் ஆணையம் அல்லது சிறப்பு குழுக்களை அமைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியா பல நெருக்கடியான சூழல்களில் உலக நாடுகளுக்கு உதவி செய்ததை சுட்டிக்காட்டியிருக்கும் பவுசி, தற்போது இந்தியாவிற்கு உதவ உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories:

>