வேலூரில் நள்ளிரவு பயங்கரம்: வாள்களுடன் வீடுகளை நோட்டமிட்ட வடமாநில கொள்ளை கும்பல்: குரைத்த நாய்களை விரட்டி வெட்டினர்

வேலூர்: வேலூர் காந்தி ரோட்டில் நள்ளிரவில் வாள்களுடன் வீடுகளை நோட்டமிட்ட வடமாநில கொள்ளை கும்பல், குரைத்த தெருநாய்களை விரட்டி வெட்டிய சிசிடிவி கேமரா பதிவுகளால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். வேலூர் சிஎம்சி மருத்துவமனை எதிரே காந்திரோடு அமைந்துள்ளது. இங்கு எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக இருந்து வருகிறது. இந்நிலையில் காந்திரோடு   காசிவிஸ்வநாதர் கோயில் தெருவில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணியளவில் வடமாநில கொள்ளை கும்பல் பயங்கர வாள்களுடன் அப்பகுதியில் உள்ள வீடுகளை நோட்டமிட்டபடி வந்துள்ளனர்.

அப்போது, அங்கிருந்த தெருநாய்கள் அவர்களை பார்த்து குரைத்தது. இதனால் ஆத்திரமடைந்த அந்த கொள்ளை கும்பல், நாய்களை விரட்டி விரட்டி வாளால் வெட்டினர். இதில் வெட்டுப்பட்ட நாய்கள் ரத்த காயங்களுடன் துடிதுடித்தபடி ஓடியது. இதையடுத்து கொள்ளை கும்பல் அங்குள்ள ஒவ்வொரு வீடாக நோட்டமிட்டபடி சென்றனர். இருப்பினும் அவர்களை நாய்கள் பின்தொடர்ந்து விரட்ட ஆரம்பித்தது. இதனால் அவர்கள் நாய்கள் மீது கற்களை வீசியபடி அங்கிருந்து வேறு பகுதிக்கு சென்றனர். இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகி தற்போது வைரலாகி வருகிறது.

இதனால் வேலூர் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக வேலூர் வடக்கு போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் கொள்ளை கும்பல் நடமாட்டம் இருப்பதால், வேலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>