மேலூர் பகுதியில் கோடை கரும்பு அறுவடை துவக்கம்: விற்பனை மந்தத்தால் விவசாயிகள் கவலை

மேலூர்: மேலூர் பகுதியில் செங்கரும்பு என்னும் சீனி கரும்பு உற்பத்தி அதிகம். பொங்கலை முன்னிட்டு இங்கு அதிகளவு இக்கரும்புகள் பயிரிடப்படும். பெரியாறு அணையில் கடை மடை பகுதியான இப்பகுதியில் வண்டல் மண் அதிகம் படிவதால், இப்பகுதி கரும்புகள் அதிக தித்திப்பு தன்மை கொண்டவையாக இருக்கும். இதனால் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா, மும்பை, கொல்கத்தா போன்ற பகுதிகளுக்கும் இங்கிருந்து கரும்புகள் லாரிகளில் ஏற்றி விற்பனைக்கு அனுப்புவது வழக்கம். பொங்கல் சீசன் முடிவடைந்த பிறகும் சில விவசாயிகள் ஆடி, சித்திரை போன்ற திருவிழாவை முன்னிட்டும், ஒரு சில குறிப்பிட்ட தென்மாவட்ட தேவைகளுக்காகவும் கோடை கரும்புகளை பயிர் செய்வது வழக்கம்.

கோயில் திருவிழாக்களில் குழந்தைகளுக்காக கரும்பு தொட்டில் கட்டும் நேர்த்திக்கடன்  இன்றளவும் கிராமப்புறங்களில் வழக்கத்தில் உள்ளது. ஆனால் தற்போது கொரோனா காரணமாக கோயில்களில் திருவிழா நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளதால், கரும்பின் தேவை குறைந்துள்ளது. சில மாவட்டங்களில் கரும்பு சாறுக்கென இவற்றையே வியாபாரிகள் வாங்குவது வழக்கம். ஆனால் தற்போது இரவு நேர போக்குவரத்து நிறுத்தம், திடீர் ஊரடங்கு என்னும் பீதியால் வியாபாரிகள் கரும்பை கொள்முதல் செய்ய தயங்குகின்றனர். இதனால் தேவை குறைந்து விலை சரிந்துள்ளது. 14 கரும்பு கொண்ட ஒரு கரும்பு கட்டை வியாபாரிகள் அதிகபட்சமாக ரூ.300க்கு மட்டுமே கொள்முதல் செய்கின்றனர்.

அதே நேரத்தில் இந்த கரும்புகள் சில்லறை விலையில் ஒரு கரும்பு ரூ.40 முதல் ரூ. 50 வரை விற்பனை செய்படுவதாகவும் கூறப்படுகிறது. போதிய விலை கிடைக்காத போதிலும் உற்பத்தி செய்த கரும்பை எந்த விலைக்காவது கொடுத்தாக வேண்டிய கட்டாயத்திற்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

Related Stories: