தோகைமலை அருகே நாகனூர் ஊராட்சி நாவல் குளத்தில் மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை: விவசாயிகள் கோரிக்கை

தோகைமலை: தோகைமலை அருகே நாகனூர ஊராட்சி நாவல் குளத்தில் ஆயில் மோட்டார் மூலம் த்ண்ணீர் எடுத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம் தோகைமலை அருகே நாகனூர் ஊராட்சி நாகனூர் கம்பத்தாம்பாறை ரோட்டில் தமிழக அரசுக்கு சொந்தமான நாவல் குளம் உள்ளது. சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்குளத்தில் மழை காலங்களில் வீரமலை வனப்பகுதி மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்து வரத்து வாரிகள் மூலம் மழைநீர் தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் மழைநீரை சிரிய குமுளி (மதகு) மூலம் அருகில் உள்ள சுமார் 100 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாய்ச்சப்பட்டு வருகிறது. மேலும் கால்நடைகள் பயன்பாட்டிற்காக குளத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை குறிப்பிட்ட அளவுக்குமேல் விவசாயத்திற்கு எடுக்க முடியாதவாறு மதகு அமைக்கப்பட்டு உள்ளது.

இதனால் குளத்தில் தேங்கி நிற்கும் மழைநீரில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கால்நடைகள் பயன் பெற்று வருவதோடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுமார் 30க்கும் அதிகமான விவசாய கிணறுகளுக்கு பயனாகவும், ஆழ்குழாய் கிணறுகள் மூலம் ஊராட்சி பொதுமக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இந்த குளம் இருந்து வருகிறது தற்போது குளத்தில் மழைநீர் நாளுக்கு நாள் வற்றியதால் போதிய தண்ணீர் இல்லாமல் விவசாய பயன்பாட்டிற்காக மதகு வழியாக திறக்கமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மதகு வழியாக தண்ணீர்எடுக்க முடியாத நிலையில் மர்ம நபர்கள் ஆயில் மோட்டார் மூலம் விவசாய நிலத்திற்கு தினந்தோறும் தண்ணீர் எடுத்து வந்ததாக தெரிகிறது. இதனால் குளத்தில் தேங்கிநின்ற மழைநீர் நாளுக்கு நாள் குறைய தொடங்கி உள்ளது. இதுகுறித்து அருகில் உள்ள பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் அளித்ததாக தெரிகிறது.

இதனால் மர்ம நபர்கள் அவசர அவசரமாக ஆயில் மோட்டாரை எடுத்து சென்றதாகவும் கூறுகின்றனர்.. இக்குளத்தில் இருந்த மழைநீர் மூலம் சுமார் ஒரு ஆண்டுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு இருந்த நிலையில், தற்போது ஆயில் மோட்டார்; மூலம் தண்ணீரை எடுத்ததால் 6 மாதத்திற்குள் குடிநீர்பற்றாக்குறை ஏற்படும் சூழல் உள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும் விவசாய கிணறுகளிலும் தண்ணீர் ஊற்றானது நின்றுவிடும் என்றும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். ஆகவே நாகனூரில் உள்ள நாவல் குளத்தில் ஆயில் மோட்டார்மூலம் தண்ணீரை எடுக்கும் நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More