பைக்காராஅணை நீர்மட்டம் சரிவு: காமராஜ் சாகர் அணையிலிருந்து மின் உற்பத்திக்காக தண்ணீர் திறப்பு

ஊட்டி:பைக்காரா அணையில் தண்ணீர் குறைந்த நிலையில், சிங்காரா மின் உற்பத்திக்காக தற்போது காமராஜ் சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் குந்தா மின் உற்பத்தி வட்டத்திற்குட்பட்ட குந்தா, கெத்தை, பரளி, அவலாஞ்சி, காட்டுக்குப்பை மற்றும் பில்லூர் நீர் மின் நிலையங்கள் உள்ளன. இந்த மின் நிலையங்கள் அப்பர்பவானி, அவாலஞ்சி, பார்சன்ஸ்வேலி, எமரால்டு, போர்த்திமந்து ஆகிய அணைகளில் உள்ள தண்ணீரை கொண்டு மின் உற்பத்தி செய்கின்றன. இது தவிர சிங்காரா மின் புதிய மற்றும் பழைய மின் நிலையங்கள், மாயார், மரவகண்டி ஆகிய மின் நிலையங்களும் உள்ளன. இந்த மின் நிலையங்களுக்கு பிரதான அணையாக பைக்காரா அணை இருந்து வருகிறது. கோடை காலத்தின் போது மின் தேைவ அதிகமாக இருக்கும். இதனால், நீர் மின் நிலையங்களும் இயக்கப்படும்.

குறிப்பாக, மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை அதிக மின் தேவை இருக்கும். இச்சமயங்களில் மின் தேவையை ஈடுகட்ட நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மின் நிலையங்களும் இயக்கப்படும். தற்போது கோடை காலம் என்பதால், சிங்காரா மின் நிலையம் தினமும் இயக்கப்படுகின்றன. இதற்காக, பைக்காரா அணையில் இருந்து நாள் தோறும் தண்ணீர் எடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அணையின் நீர்மட்டம் மிகவும் சரிந்துவிட்டது. தொடர்ந்து இந்த அணையில் இருந்து  தண்ணீர் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேசமயம், சிங்காரா மின் நிலையத்தை இயக்க வேண்டிய கட்டாயத்திற்கு மின்வாரியம் தள்ளப்பட்டுள்ளது.

இதனால், சிங்காரா மின் நிலையத்தை இயக்கவும், பைக்காரா அணையில் தண்ணீர் குறைந்துள்ளதாலும் தற்போது ஊட்டி அருகேயுள்ள காமராஜ் சாகர் அணையில் இருந்து தினமும் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த தண்ணீர் கிளன்மார்கன் அணைக்கு சென்று அங்கிருந்து ராட்சத குழாய்கள் வழியாக சிங்காரா மின் நிலையங்களுக்கு சென்று மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது சமவெளிப் பகுதிகளில் மின் தேவை அதிகரித்துள்ளதால், தொடர்ந்து இம்மாதம் முழுக்க இந்த அணை திறக்கப்பட்டு சிங்காரா மின் நிலையம் இயக்கப்படும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>