×

மேற்குவங்க ராமநவமி வன்முறையில் பாஜக எம்எல்ஏ படுகாயம்: பதற்றத்தால் இணைய சேவை துண்டிப்பு

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் நடந்த ராமநவமி விழாவில் பங்கேற்ற பாஜக எம்எல்ஏ மீது குறிப்பிட்ட பிரிவினர் நடத்திய தாக்குதலில், அவர் படுகாயமடைந்தார். அங்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டது. மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் கடந்த சில நாட்களுக்கு முன் ராம நவமி ஊர்வலம் நடந்த போது இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதனால் கல்வீச்சு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தன. அதேபோல் ஹூக்ளியில் நடந்த ராம நவமி யாத்திரையில் பாஜக தேசிய துணைத் தலைவர் திலீப் கோஷ், எம்எல்ஏ பிமன் கோஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது மற்றொரு பிரிவினருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதாகவும், வாள் உள்ளிட்ட ஆயுதங்களை உயர்த்தி காட்டி அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் இருபிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கல்வீச்சு சம்பவங்கள் அரங்கேறின. இந்த சம்பவத்தில் பாஜக எம்எல்ஏ பிமன் கோஷ் உள்ளிட்டோர் காயமடைந்தனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருவதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

வாள் வீசி கோஷமிட்டதால் வழக்கு: அரியானா மாநிலம் குருகிராமில் அனுமதியின்றி குறிப்பிட்ட அமைப்பினர் நடத்திய ஊர்வலத்தில், வாள் வீசி அச்சுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. அந்த அமைப்பின் தலைவர்களும், தொண்டர்களும் புல்டோசர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். டிகோனா பூங்காவில் அமர்ந்திருந்த காதல் ஜோடியை அடித்து விரட்டினர். அதனால் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும், அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் செயல்பட்டதாக கூறி, ஐபிசி 153-ஏ, 504, 144 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

The post மேற்குவங்க ராமநவமி வன்முறையில் பாஜக எம்எல்ஏ படுகாயம்: பதற்றத்தால் இணைய சேவை துண்டிப்பு appeared first on Dinakaran.

Tags : BJP MLA ,Ram Navami ,West Bengal ,Kolkata ,Ramnavami festival ,West ,Bengal ,Ramnavami ,Dinakaran ,
× RELATED சண்டை போடுபவர்களுக்கு தகுதியில்லை...