×

தாபாவில் காரை நிறுத்திய போது ஐஏஎஸ் அதிகாரியின் செல்ல நாய் ஓட்டம்: போஸ்டர் அடித்து தேடும் போலீசார்

குவாலியர்: குவாலியர் பகுதியில் உள்ள தாபாவில் காரை நிறுத்திய போது, அதில் இருந்த ஐஏஎஸ் அதிகாரியின் நாய் தப்பி ஓடியதால், அந்த நாயை போலீசார் தேடி வருகின்றனர். மத்திய பிரதேச மாநில கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது இரண்டு செல்ல நாய்களை ராய்ப்பூரில் இருந்து டெல்லிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது குவாலியர் பகுதியில் காரை நிறுத்திவிட்டு அப்பகுதியில் இருந்த தாபாவுக்குள் சென்றார்.

அந்த நேரத்தில் காருக்குள் இருந்த இரண்டு நாய்களும் காரில் இருந்து வெளியே குதித்து ஓடின. அங்கிருந்த ஊழியர்கள் இரண்டு நாய்களையும் விரட்டி பிடிக்க முயன்றனர். எப்படியோ ஒரு நாயை பிடித்துவிட்டனர். மற்றொரு நாயை பிடிக்க முடியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஐஏஎஸ் அதிகாரி, அந்த பகுதியின் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்களும் ஓடிப்போன நாயை பல இடங்களில் தேடிப் பார்த்தனர். எங்கும் அந்த நாய் கிடைக்கவில்லை.

வேறுவழியின்றி அந்த நாயின் புகைப்படத்துடன் போஸ்டர் அடித்து, குவாலியர் பகுதியில் செயல்பட்டு தாபா உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டிவைத்துள்ளனர். அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண்ணில், ஓட்டம் பிடித்த நாய் குறித்த தகவலை தெரிவிக்கவும், அவ்வாறு தெரிவித்தால் உரிய சன்மானம் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் உள்ள செல்போன் எண்ணானது, குவாலியர் மாநகராட்சி ஊழியரது என்று போலீசார் தெரிவித்தனர். ஐஏஎஸ் அதிகாரியின் நாய் மாயமான விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post தாபாவில் காரை நிறுத்திய போது ஐஏஎஸ் அதிகாரியின் செல்ல நாய் ஓட்டம்: போஸ்டர் அடித்து தேடும் போலீசார் appeared first on Dinakaran.

Tags : IAS ,Thaba ,Gwalior ,dhaba ,Dinakaran ,
× RELATED ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு வினாத்தாள் மொழிமாற்றம்: ஐகோர்ட் யோசனை