×

ஐஎப்எஸ் நிதி நிறுவன ஊழியர் வீட்டில் அமலாக்கத்துறை போலீசார் சோதனை

வேலூர்: நெமிலியில் உள்ள ஐஎப்எஸ் நிதி நிறுவன ஊழியர் வீட்டில் இன்று காலை அமலாக்கத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வேலூரை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன்சுந்தரம். இவர் காட்பாடியில் ஐஎப்எஸ் என்ற நிதி நிறுவனத்தை தொடங்கி அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து பலகோடி ரூபாயை பெற்று மோசடி செய்துள்ளார்.

இதுதொடர்பான புகாரின்பேரில் வேலூரில் உள்ள ஐஎப்எஸ் நிதி நிறுவன உரிமையாளர்கள் வீடு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் உள்ள உதவியாளர் ஜெகன்நாதன் வீடுகளில் கடந்த ஆகஸ்ட் மாதம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆவணங்கள் மற்றும் பணம் உட்பட பல பொருட்களை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து ஜெகன்நாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெகன்நாதன் ஜாமீனில் வெளியே வந்தார். இவ்வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெகன்நாதன் நெமிலியில் உள்ள தனது வீட்டிற்கு வந்ததாக தகவல் பரவியது. இதையறிந்து அவரிடம் பணத்தை பறிகொடுத்து ஏமாந்த 30க்கும் மேற்பட்டோர் நேற்று ஜெகன்நாதன் வீட்டை முற்றுகையிட்டனர். இதில் சயனபுரத்தை சேர்ந்த மோகன்(35), தீரன்(33) உள்ளிட்ட சிலர், தங்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதுகுறித்து தகவலறிந்த நெமிலி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடுத்தனர். பின்னர் போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின் அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் இன்று காலை சென்னை அமலாக்கத்துறை இயக்குனரக போலீசார் 6 பேர் கொண்ட குழுவினர் நெமிலியில் உள்ள ெஜகன்நாதன் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் வீட்டில் திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மேலும், வீட்டில் இருந்த ஜெகன்னாதனின் தந்தை மற்றும் உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post ஐஎப்எஸ் நிதி நிறுவன ஊழியர் வீட்டில் அமலாக்கத்துறை போலீசார் சோதனை appeared first on Dinakaran.

Tags : Enforcement Directorate ,IFS ,Vellore ,Nemili ,Enforcement department ,Dinakaran ,
× RELATED நீரிழிவு பாதித்துள்ள கெஜ்ரிவால்...