×

சாமி சிலைகளை திருடி பதுக்கிய வட்டார கல்வி அலுவலர் கைது

தஞ்சை: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த வாட்டாத்திகோட்டை குறிச்சி அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் செல்லத்துரை(59). இவர் தற்போது பதவி உயர்வு பெற்று வலங்கைமானில் வட்டார கல்வி அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் குறிச்சி நடுநிலைப்பள்ளியில் கடந்த 6 மாதங்களுக்கு முன் தலைமை ஆசிரியராக பணியாற்றியபோது பள்ளிக்கு சொந்தமான டேபிள், சேர்களை தனது சொந்த பயன்பாட்டுக்காக எடுத்து சென்றதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதனால் ஆத்திரமடைந்த வட்டார கல்வி அலுவலர் செல்லதுரை, பழமைவாய்ந்த குறிச்சி காசிவிஸ்வநாதர் சுவாமி சிலை மற்றும் நந்தி கற்சிலையை திருடி வலங்கைமானில் பதுக்கி வைத்ததாக தெரிகிறது.

கடந்த 2 நாட்களுக்கு முன் கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற பக்தர்கள், காசிவிஸ்வநாதர், நந்தி சிலை காணாததை பார்த்து கோயில் செயல் அலுவலரிடம் தெரிவித்தனர். இதுகுறித்து கரம்பயம் மாரியம்மன் கோயில் செயல் அலுவலர் சக்திவேல் அளித்த புகாரின்பேரில் வாட்டாத்தி கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், வட்டார கல்வி அலுவலர் செல்லத்துரை, சுவாமி சிலைகளை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து பட்டுக்கோட்டையில் தனது மகளின் வீட்டில் வசித்து வந்த வட்டார கல்வி அலுவலர் செல்லத்துரையை போலீசார் நேற்று கைது செய்து வலங்கைமான் அழைத்து வந்து விசாரித்தனர்.

மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், தன் மீது குற்றச்சாட்டு தெரிவித்ததால் அந்த கோயில் சுவாமி சிலைகளை திருடியதும், அந்த கோயிலில் சித்திரை திருவிழா இந்த மாதம் நடக்கிறது. சுவாமி சிலைகளை திருடினால் திருவிழாவை நிறுத்தி விடலாம் என்ற எண்ணத்தில் திருடியதும் தெரியவந்தது. தனது உதவியாளர் பிரபு வீட்டில் 2 பழமையான கற்சிலைகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிலைகளை போலீசார் மீட்டனர். கும்பகோணம் கோர்ட்டில் செல்லத்துரையை போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post சாமி சிலைகளை திருடி பதுக்கிய வட்டார கல்வி அலுவலர் கைது appeared first on Dinakaran.

Tags : Sami ,Tanjore ,Chellathurai ,Kurichi Govt. Middle School ,Wattathikottai ,Thanjavur district ,Orathanadu ,
× RELATED மன்னார்குடி அருகே காளியம்மன்...