×

கொரோனா 2வது அலையின் தாக்கம்: கடந்த ஆண்டைவிட 3 மடங்கு அதிகம்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி

சென்னை:  சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நந்தம்பாக்கத்தில் உள்ள கோவிட் கேர் மையத்தை நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமாயிருக்கிறது. கடந்த ஆண்டை பார்க்கும் போது தற்போது 3 மடங்கு அதிகமாயிருக்கிறது. கடந்த ஆண்டு அதிகபட்சமாக 2,350 இருந்தது. தற்போது 6,200 வரை பாசிட்டிவ் என்று வருகிறது.

மொத்தமாக வரக்கூடிய பாசிட்டிவ் நோயாளிகள், ஆக்டிவ் நோயாளிகள் 14 நாட்கள் எத்தனை பேர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்கள், கோவிட் கேர் சென்டர், கோவிட் மருத்துவமனைகளில் இருப்பவர்கள் முழுவதும் குணமடையாதவர்கள் ஆக்டிவ் நோயாளிகள். அதன்படி சென்னையை பொறுத்தவரை 33,500 பேர் உள்ளனர். அதை மூன்றாக பிரிக்கிறோம் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் 65-70 சதவீதம் பேர், 15-20 சதவீதம் பேர் கோவிட் கேர் சென்டரில் உள்ளனர். 10-13 சதவீதம் பேர் உயர் மருத்துவ சிகிச்சை தேவைப்படுவர்கள். அதாவது மூச்சு திணறல், இயல்பாக இருக்க முடியாதவர்கள் அவர்களை கவனமான பார்க்க வேண்டும். அதில் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேர் உள்ளனர். இது, வரும் நாட்களில் அதிகரிக்க கூடும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளான ராஜிவ் காந்தி மருத்துவமனை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைகள், இஎஸ்ஐ போன்ற மருத்துவமனைகளில் 2 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ஆக்சிஜன் படுக்கைகள் தயார் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டு 1000 படுக்கைகள் தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இதில் 860 ஆக்சிஜன் படுக்கைகள், 150க்கும் மேற்பட்ட சாதாரண படுக்கைகள் அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படும். இதை இன்னும் அதிகப்படுத்த முடிவு செய்துள்ளோம்.

ஈஞ்சம்பாக்கம், மணலியில் உள்ள மருத்துவமனைகளில் 100 படுக்கைகள் உள்ளது. அதிலும் ஆக்சிஜன் படுக்கைகள் தயார் செய்ய உள்ளோம். தண்டையார் பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் 240 படுக்கைகள் என 1,400 ஆக்சிஜன் படுக்கைகள் 10 நாட்களில் முடிக்கும் அளவில் பணி நடந்து வருகிறது. பாதிப்பு அதிகம் வந்தால் அடுத்தகட்ட நடவடிக்கையாக கூடுதலாக 120 டாக்டர்கள், 100 செவிலியர்கள், லேப்டெக்னீசியன் ஒரு ஆண்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் எடுத்துள்ளோம். இதையடுத்து 200 மினி கிளினிக் உள்ளவர்கள், 120 மருத்துவர்கள் என 320 மருத்துவர்கள் களத்திற்கு செல்வார்கள்.

 படுக்கைகளுக்காக அதிக நேரம் காத்திருக்க வேண்டியதாக தகவல்கள் வந்துள்ளதையடுத்து யூனிவைடு கமாண்ட் கன்ட்ரோலில் அனைத்து தனியார் மருத்துவமனைகளில் எவ்வளவு படுக்கைகள் காலியாக உள்ளது என்பதை பதிவு செய்வர்கள். அதற்கென தனி நம்பர் அறிவிக்கப்படும். அதில் தொடர்பு கொண்டாலே அவர்கள் கூறுவதையடுத்து சுலபமாக மருத்துவமனைகளில் சேர்க்க உதவியாக இருக்கும்.  

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி இன்றைக்கு வருவது சாத்தியமில்லை. தடுப்பூசி போதுமான அளவு இல்லாததால் இன்று செயல்படுத்த வாய்ப்பில்லை. மேலும் 65 சதவீதம் வரை 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 146 ஆரம்ப சுகாதார நிலையம், 15 பொது சுகாதார மையத்திலும், அரசு மருத்துவமனைகள், 15 சிறப்பு சென்டர், வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடுகிறோம். எனவே அருகே உள்ள இடங்களை தேர்வு செய்தால் கூட்டம் இருக்காது. 400 இடங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. எந்த வேக்சின் கிடைக்கிறதோ போட்டுக் கொள்ளலாம் இரண்டுமே சிறப்பானது தான், கோவாக்சின் 28 நாட்கள் கழித்து தான் 2வது டோஸ் போட வேண்டும்.

பொதுமக்கள் சாதாரண அறிகுறிகள் இருந்தால் சோதனை செய்து கொள்ள வேண்டும். இளம் வயதினரின் நிறைய இறப்புகளுக்கு காரணம் அவர்கள் ஏதாவது அறிகுறி இருந்தால் அதை மறைப்பது தான். கிருமிநாசினியை விட சமூக இடைவெளியை கடைபிடித்து தனிமைப்படுத்திக் கொள்வது தான், மக்கள் பதற்றம் அடைய வேண்டாம். ஆக்சிஜன் தட்டுப்பாடு இதுவரை வரவில்லை. ஆக்சிஜன் உற்பத்தி இல்லை, லாரிகள் மூலம் கொண்டு வந்து நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Corona ,Prakash , Corona 2nd wave impact: 3 times more than last year: Interview with Corporation Commissioner Prakash
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...