வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை, கட்டுப்பாடு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள்  கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள்  ராணிமேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை கிறிஸ்துவ கல்லூரி ஆகிய மையங்களில்  எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்க வேண்டியவர்கள் வேட்பாளர்கள், வேட்பாளரின் தலைமை  முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள், ஊடக துறையினர், வாக்கு எண்ணிக்கை அலுவல் தொடர்பாக பாஸ்  வைத்திருப்போர் மற்றும் மையங்களில் அனுமதிக்கப்பட்ட அலுவலர்கள் தவிர யாரும் வாக்கு எண்ணும் மையங்களில் உள்ளே  நுழைய தடை செய்யப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் அரசு மருத்துவமனை அல்லது அனுமதி பெற்ற தனியார்  மருத்துவமனையில் 48 மணி நேரத்திற்கு முன்பாக கொரோனா சோதனை செய்து அதற்கான “நெகட்டிவ் சர்டிபிகேட்”  பெற்றிருக்க வேண்டும். இருமுறை தடுப்பூசி போடப்பட்டு இருக்க வேண்டும்.உள்ளே நுழையும் ஒவ்வொரு நபரையும் வெப்பநிலையை சோதனை செய்யும் போது 98.6 பாரன்ஹீட் குறைவாக இருக்க வேண்டும்.  வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்ட பொருட்கள், காகித தாள்கள், நோட்பேட், மற்றும் வாக்குச்சாவடியின்  தலைமை அலுவலர்களால் கொடுக்கப்பட்ட படிவம் இரண்டாவது நகல் ஆகியவை வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச்  செல்ல அனுமதிக்கப்படுகிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தால் அதிகாரமளிக்கப்பட்ட அலுவலரால் வழங்கப்பட்ட அனுமதியின்படி கைப்பிடி கேமரா  எடுத்துச் செல்லலாம். வாக்கு எண்ணும் மையங்களில் கைப்பேசி, கேமரா, துப்பாக்கி, வெடி பொருட்கள், பேனாக்கள், பாட்டில்கள்,  தகர குவலைகள், கொள்கலன்கள், டிபன்பாக்ஸ், குடைகள், தீக்குச்சிகள், வயர்கள், வேதிப்பொருட்கள், தின்பண்டங்கள்  ஆகியவை எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கூர்மையான பொருட்களை வாக்கு எண்ணும் மையத்திற்குள் எடுத்துச்  செல்லக்கூடாது.

வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் உணவு தண்ணீர் தின்பண்டங்கள் வாக்கு மையங்களுக்கு எடுத்துச் செல்லக்கூடாது. வெற்றி  சான்றிதழ் பெறுவது மற்றும் ஊர்வலம், தேர்தல் ஆணையம் வெற்றி ஊர்வலம் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது.  வெற்றி சான்றிதழ் பெறும்போது இரண்டு நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை.

மேலும் பொது வழிமுறைகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுமதிக்கப்பட்ட நபர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட  அடையாள அட்டையை தெளிவாக பார்ப்பதற்கு தெரியும்படி வைத்திருக்க வேண்டும். மாவட்ட தேர்தல் அலுவலரால் வழங்கப்பட்ட நுழைவுச்சீட்டு உள்ளவர்கள் மட்டும் வாக்கு எண்ணும் மையத்திற்குள்  அனுமதிக்கப்படுவார்கள். போதையில் உள்ளவர்களை வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கக்கூடாது. வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே  செல்லும் வேட்பாளர்களின்  முகவர்கள் திரும்ப உள்ளே வர அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

நுழைவுச்சீட்டு வைத்திருக்கும் வாகனங்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். அனுமதிக்கப்பட்ட பகுதிகளில்  மட்டும் வாகனங்களை நிறுத்த அனுமதிக்க வேண்டும். வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீரை பணம்  கொடுத்து பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் முக்கிய இடங்களில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பரவலை முன்னிட்டு வேட்பாளர், தலைமை முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் தவிர வேறு  யாரும் வெளியில் வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு வெளியில் கூட்டம் கூடுவதை தடை  செய்யப்பட்டுள்ளது. அனைவரும் கொரோனா  சம்பந்தமான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>