×

கொரோனா பாதித்து குணமடைந்த சிறப்பு எஸ்ஐ உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் இதுவரை 9 ஆயிரம் காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாநிலம்  முழுவதும் 258 காவலர்கள் இதுவரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னையில் இதுவரை 4 ஆயிரம்  போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு 7 பேரும், இந்த ஆண்டு 5 பேர் என சென்னையில் மட்டும்  12 போலீசார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில் செம்பியம் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆனந்தனுக்கு (52), கடந்த சில  நாட்களுக்கு முன் காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்ததையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.  இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கடந்த 18ம் தேதி ஓமந்தூரார் பன்நோக்கு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைந்ததால் ஓமந்தூரார்  மருத்துவமனையில் இருந்து கடந்த 29ம் தேதி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று முன்தினம்  திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இன்ஜினியர் பலி: வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மோகன் குமார் (45). தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் தண்டையார்பேட்டை  கோட்டம் 1ல் உதவி நிர்வாக பொறியாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், குடிசை மாற்று வாரிய இணை மேலாண்  இயக்குனர் உத்தரவின் பேரில், வட சென்னை மற்றும் அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரதம மந்திரி வீடு கட்டும்  திட்டத்தில் வீடு கட்டுபவர்கள் குறித்து ஆய்வு செய்யும் பணியில் உதவி நிர்வாக பொறியாளர் மோகன்குமார் கடந்த ஒரு  மாதமாக ஈடுபட்டார்.

 இவருக்கு 15 நாட்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், கொரோனா பரிசோதனை செய்தார். அதில், கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று மாலை  உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.  கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற ஆய்வு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் உத்தரவிட்டதே இவர்  இறப்புக்கு காரணம் என பொறியாளர் சங்கத்தினர் குற்றம்சாட்டினர்.

Tags : Special SI fatality with corona infection healed
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...