×

கோடை வெயிலை சமாளிக்க திருவாரூரில் விற்பனைக்கு வந்த மண்பானைகள் விரும்பி வாங்கிச்செல்லும் பொதுமக்கள்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் கோடை வெயிலை சமாளிக்க மண்பானைகள் விற்பனைக்கு வந்துள்ளன. மண்பானை பயன்பாடு உடல் நலத்துக்கு நல்லது என்பதால் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் கடுமை காட்ட துவங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் கோடைக் காலத்தில் வழக்கத்தை விட வெப்பம் கூடுதலாக இருக்கும் என ஒன்றிய வானிலை மையம் எச்சரித்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 5 மணி வரை நீடிக்கிறது. குறிப்பாக 12 மணி முதல் 3 மணி வரை வெயிலின் உச்சம் அதிக அளவில் உள்ளது. வெயிலுடன் அனல் காற்று வீசுவதால் வா கன ஓட்டிகள் முதியவர்கள் குழந்தைகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இரவு நேரங்களில் வீடுகளில் வெயில் தாக்கம் அதிக அளவில் தெரி கிறது.

வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பொதுமக்கள் இளநீர், கரும்பு சாறு, தர்பூசணி ஆகியவற்றை அதிகம் விரும்பி பருகி வருகின்றனர். தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் சமைப்பதற்கும், குடிநீர் வைத்துக் கொள்வதற்கும் மண்பாண்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தினர். இதன் காரணமாக, எவ்வித உடல் உபாதைகளும் ஏற்படாமல் ஆரோக்கியத்துடன் பொதுமக்கள் வாழ்ந்து வந்தனர். அதன் பின்னர், நாகரீகம் என்ற பெயரில் அலுமினியம் மற்றும் சில்வர் போன்ற பாத்திரங்கள் உபயோகத்திற்கு வந்தது மட்டுமன்றி தற்போது பால் காய்ச்சுவது முதல் சாதம் வடிப்பது வரை அனைத்தும் குக்கர் என்ற சாதனத்தின் மூலம் நடந்து வருகிறது. இதன் காரணமாக, தற்போது பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு வருவதுடன் குக்கர் சில நேரங்களில் வெடித்து சிதறும் சம்பவமும் நடைபெற்று வருகிறது. மேலும் கடந்த காலங்களில் மண் பானைகளில் குடிநீர் வைத்து குடித்து வந்த நிலையில் தற்போது குடிநீரை வைத்துக்கொள்வதற்கு கேன் மற்றும் பாட்டில் குடிநீர் என அனைத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிலை இருந்து வருகிறது. இந்நிலையில், கோடைகாலங்களில் பெரும்பாலான மக்கள் உடல் குளிர்ச்சி கருதி மண் பானைகளில் குடிநீர் வைத்துக் குடிப்பது தற்போதும் வழக்கமாக கொண்டு வருகின்றனர்.

அதன்படி, தமிழகத்தில் தற்போது கோடை காலம் துவங்கி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் மண்பானைகளை தேடி பொதுமக்கள் தற்போது வாங்கும் நிலை இருந்து வருகிறது. மேலும், நவீன காலத்திற்கு ஏற்றவாறு இந்த மண்பானைகளில் பிளாஸ்டிக் குடிநீர் கேன்களில் நீரை திறப்பதற்கு இருந்து வரும் குழாய் போன்று இந்த மண் பானைகளிலும் குடிநீரை பிடிப்பதற்கான குழாய்கள் வைக்கப்பட்டுள்ளதால் மக்கள் விரும்பி வாங்கி சென்ற வண்ணம் இருந்து வருகின்றனர். இதுகுறித்து திருவாரூர் அண்ணா சதுக்கம் அருகில் மண்பானை விற்பனை செய்வோர் கூறுகையில், மண்பானைகள் உடலுக்கு நல்லது என்ற நோக்கத்தில் பொதுமக்கள் வீடு, கடைகள் அலுவலகங்களுக்காக வாங்கி செல்கின்றனர். மோர், தண்ணீர் குளிர்பானம், கூழ் விற்பனை செய்பவர்களும் பெரிய அளவிலான மண்பானை யை வாங்கி செல்கின்றனர். இதனால் மண் பானை விற்பனை அதிகரித்துள்ளது என்றனர்.

The post கோடை வெயிலை சமாளிக்க திருவாரூரில் விற்பனைக்கு வந்த மண்பானைகள் விரும்பி வாங்கிச்செல்லும் பொதுமக்கள் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Thiruvarur ,
× RELATED திருவாரூரில் மின்சாரம் தாக்கி ரயில்வே ஊழியர் உயிரிழப்பு..!!