உள்ளூர் மக்களுடன் தொடர்பில் இருங்கள்: மத்திய அமைச்சர்களுக்கு மோடி உத்தரவு

புதுடெல்லி: ‘பொதுமக்களுக்கு உதவி செய்யும் வகையில், தங்கள் பகுதிகளுக்கு உட்பட உள்ளூர் மக்களுடன் தொடர்பில் இருங்கள்,’ என்று  மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். கொரோனாவின் 2ம் அலையின் தாக்குதல் தீவிரம், தடுப்பூசி, ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகள் மத்திய அரசை திணற வைத்துள்ளது.  இதனால், நிலைமையை சமாளிக்க பல்வேறு தரப்புடன் பிரதமர் மோடி தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தி வருகிறார். மாநில முதல்வர்கள்,  உயர்நிலை அதிகாரிகள், மருத்துவத் துறையினர் என பல கட்ட ஆலோசனைகளை ஏற்கனவே நடத்தி இருக்கிறார்.

நேற்று அவர் மத்திய  அமைச்சர்களுடன் டெல்லியில் ஆலோசனை நடத்தினார். கொரோனா 2வது அலை தொடங்கிய பிறகு, மத்திய அமைச்சர்களுடன் மோடி நடத்திய  முதல் ஆலோசனை கூட்டம் இதுதான். இது, காணொலி மூலமாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘உள்ளூர் பகுதி மக்களுடன் தொடர்பில் இருங்கள். அவர்களுக்கு தேவைப்படும் உதவியை செய்யுங்கள்.  நிலைமையை தெரிந்து கொள்ள பொதுமக்களின் கருத்துகளை கேளுங்கள்,’’ என்று அமைச்சர்களுக்கு உத்தரவிட்டார். இது தொடர்பாக மத்திய  அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:  ஆலோசனை கூட்டத்தில் நிதி ஆயோக் உறுப்பினரான விகே பால், கொரோனா மேலாண்மை பற்றிய உரையை வழங்கினார். மத்திய அமைச்சர்கள்  பியூஷ் கோயல் மற்றும் மன்சுக் மண்டேவியா இருவரும் ஆக்சிஜன், அத்தியாவசிய மருந்துகள் தொடர்பாக சக அமைச்சர்களுக்கு விளக்கினர்,’ என  கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>