×

ராமேஸ்வரம் கோயிலை சுற்றி ரத வீதியில் சாலையோர நிழற்குடைகள்: பயணிகள் எதிர்ப்பார்ப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலை சுற்றி ரத வீதியில் சாலையோர பிளாட்பாரத்தில் பக்தர்கள் நலன் கருதி நிழற்குடைகள் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலை சுற்றி ரத வீதியில் இரு சக்கர வாகனங்கள் தவிர்த்து ஆட்டோ, கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல தடை உள்ளது. பக்தர்கள் வசதிக்காக பேட்டரி கார்கள் மட்டுமே ஓடுகிறது. அதுவும் குறைந்த எண்ணிக்கையில் பேட்டரி கார்கள் இயக்கப்படுவதால் பக்தர்களுக்கு போதுமானதாக இல்லை. இதனால் வெயில் காலத்தில் பக்தர்கள் நடந்து செல்வதற்கு வசதியாக சாலையோர பிளாட்பாரத்தில் நிழற்குடைகள் அமைக்க பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடிய பிறகு கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தக் கிணறுகளில் நீராடுவர். பின்னர் சுவாமி தரிசனம் செய்கின்றனர். தீர்த்தக் கடலில் நீராடும் பக்தர்கள் வடக்கு ரத வீதியில் அமைந்துள்ள கோபுரம் வழியாக கோயிலுக்குள் தீர்த்தமாட செல்கின்றனர். 22 நீர்த்தங்களில் நீராடியதும் தெற்கு கோபுரம் வழியாக கோயிலில் இருந்து வெளியேறுகின்றனர். தீர்த்தமாடவரும் பக்தர்களும், சுவாமி தரிசனத்திற்கு கோயிலுக்கு செல்லும் பக்தர்களும் நான்கு ரத வீதியில் நடந்து செல்கின்றனர்.

வெயில் காலத்தில் இவர்கள் ரத வீதியில் செருப்பு அணியாமல் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். கோயிலை சுற்றிலும் ரத வீதியில் சாலையோரத்தில் இரண்டு பக்கமும் பிளாட்பார மேடை உள்ளது. பேவர்பிளாக் தரைத்தளத்துடன் பல லட்சம் செலவில் நடைமேடை அமைக்கப்பட்டது. இந்த நடை மேடை கடைகாரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் ரதம் ஓடும் பிரதான சாலையிலேயே நடந்து செல்கின்றனர். கோயிலுக்குள் நீராடச் செல்லும் போதும், சுவாமி கும்பிட செல்லும்போதும் பக்தர்கள் செருப்பு அணிந்து செல்ல முடியாது என்பதால் நடந்து செல்கின்றனர். வெயில் காலத்தில் கடும் சூட்டையும் தாங்கியபடி வயதானவர்கள், பெண்கள், சிறுவர்கள் என பக்தர்கள் சிரமத்துடன் செல்கின்றனர். வெயிலில் ஒதுங்குவதற்கு நிழல் தேடி வயதானவர்கள் தவிப்பதும், சிறுவர்கள் ஓடுவதும் அன்றாட காட்சியாக உள்ளது.

கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஏற்கனவே ஒன்பது பேட்டரி கார்கள் இயக்கப்பட்டது. பின்னாளில் இவைகள் அனைத்தும் பழுதானது. இதன்பின் பல ஆண்டுகள் கழித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கையினால் சில சிறிய பேட்டரி வண்டிகள் தற்போது இயக்கப்படுகிறது. இவைகள் போதுமானதாக இல்லை. இதனால் கோயிலை சுற்றிலும் ரத வீதியில் உள்ள நடைமேடையில் நிரந்தரமாக நிழற்குடைகள் அமைக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தற்போது நான்கு ரதவீதியிலும் சாலையின் இருபக்கமும் நடைமேடைகள் கடைகாரர்கள் மற்றும் விடுதியாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. நடைபாதை கடைகளும் போடப்பட்டுள்ளது. நடைமேடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பக்தர்கள் கஷ்டமின்றி நடந்து செல்லும் வகையில் நிரந்தரமாக நிழற்குடைகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post ராமேஸ்வரம் கோயிலை சுற்றி ரத வீதியில் சாலையோர நிழற்குடைகள்: பயணிகள் எதிர்ப்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Ratha Road ,Rameswaram Temple ,Rameswaram ,Rameswaram… ,
× RELATED பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம்...