சென்னையின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்குமா மும்பை?

டெல்லி: ஐபிஎல் தொடரில் இன்று டெல்லியில் நடைபெறும் 27வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள்  மோத உள்ளன. நடப்பு சாம்பியனான மும்பை  இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி தலா 3 வெற்றி, தோல்விகளுடன் களம் காண உள்ளது.  பெங்களூர்,  டெல்லி, பஞ்சாப் அணிகளிடம் தோற்ற மும்பை அணி  கொல்கத்தா, ஐதராபாத், ராஜஸ்தான் அணிகளை வீழ்த்தியது. ஹாட்ரிக் கோப்பை வெல்லும் கனவில் உள்ள ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி தட்டுதடுமாறிதான் முதல் 2 வெற்றிகளை  வசப்படுத்தியது. ஆனால்  நேற்று முன்தினம் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் அசத்தல் வெற்றியை சுவைத்தது. குயின்டன் டிகாக் நின்று  விளையாடி அணியை கரை சேர்த்தார்.

அவ்வப்போது ரோகித், க்ருணால், பொல்லார்டு, இஷான் கிஷன் ஆகியோர்  அதிரடி காட்டுகின்றனர். ஹர்திக் இன்னும் ஆட ஆரம்பிக்கவில்லை.  கிறிஸ் லின் முதல் ஆட்டத்தில் அசத்தியும் அதன் பிறகு வாய்ப்பு கிடைக்கவில்லை. பந்துவீச்சில் பும்ரா, ராகுல் சாகர், டிரென்ட் போல்ட் ஆகியோர்  சென்னைக்கு நெருக்கடி தரக்கூடும். அதனை சந்திக்க இருக்கும் சென்னை இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி ஒன்றில் மட்டுமே ேதாற்று இருக்கிறது.  முதல் ஆட்டத்தில்  டெல்லியிடம் தோற்ற சென்னை,  அதன் பிறகு  பஞ்சாப், ராஜஸ்தான் கொல்கத்தா, பெங்களூர், ஐதராபாத் அணிகளை வீழ்த்தி தொடர்  வெற்றிகளை குவித்து வருகிறது.

தோனி தலைமையிலான அணியில் டூ பிளெஸ்ஸி, மொயீன் அலி, ரெய்னா,  ஜடேஜா என சீனியர் வீரர்கள் மட்டுமின்றி கெய்க்வாட், சாம் கரண்,   என்ஜிடி என ஜூனியர் வீரர்களிடமும் ‘ஸ்பார்க்’   பொறி பறக்கிறது. அதனால் சென்னை  உற்சாகமாகவே இன்று மும்பையை எதிர் கொள்ளும் அதே நேரத்தில் கடந்த கால வரலாறுகள் எல்லாம் மும்பைக்கு சாதகமாக இரு்க்கின்றன. சென்னை அணி இதுவரை நடந்த தொடர்களில்  மும்பையிடம்தான் அதிக ஆட்டங்களில் தோற்று இருக்கிறது. அது மும்பைக்கு சாதகமான அம்சம்.

வெற்றிகள் கிடைத்தாலும்  மும்பை இந்தமுறை இன்னும் ஒருங்கிணைந்து ஆடவில்லை. அந்த குறையை ெசன்னை சாதகமாக்கிக் கொள்ளும்   வாய்ப்புகள் அதிகம்.  அதுமட்டுமல்ல  இந்த முறை சாதித்து ஓய்வு பெற வேண்டும் என்ற இலக்கில் தோனியும்,  தொடர் வெற்றியின்  மகிழ்ச்சியில்   சென்னையும்  இருப்பதால் வெற்றிக்காக  மும்பை அதிகம் உழைக்க வேண்டி இருக்கும்.

 இதுவரை மோதியதில்...

ஐபிஎல் தொடர்களில்  மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இதுவரை 30 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்தன. அவற்றில்  மும்பை 18 ஆட்டங்களிலும், சென்னை 12 ஆட்டங்களிலும் வெற்றி வாகை சூடியுள்ளன. அவற்றில் 9 முறை பிளே ஆப் மற்றும் இறுதி  ஆட்டங்களில் மோதியுள்ளன. அவற்றிலும் மும்பை 5-4  என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதிலும் 4 முறை மோதிய இறுதியாட்டங்களில்  மும்பை 3முறை சென்னையை வீழ்த்தியுள்ளது.  இந்த 2 அணிகளும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் மும்பை 4ஆட்டங்களிலும், சென்னை  ஒரேயொரு ஆட்டத்திலும் வென்றுள்ளன. இந்த 2 அணிகளும் மோதிய ஐபிஎல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை 208, மும்பை 202ரன் குவித்துள்ளன. குறைந்தபட்சமாக மும்பை 141,  சென்னை 79ரன் எடுத்துள்ளன.

Related Stories:

>