கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் திடீர் மரணம்: ரஜினி, கமல் உள்பட திரையுலகினர் இரங்கல்

சென்னை: தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவரும், தமிழ் திரையுலகின்  முன்னணி இயக்குனர்களில் ஒருவருமான கே.வி.ஆனந்த், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீர் மாரடைப்பு  காரணமாக நேற்று மரணம் அடைந்தார்.  சென்னை அடையாறு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர், கே.வி.ஆனந்த் (54). சில நாட்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டது. இதனால், போரூர் நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பிறகு கொரோனா தொற்று  குணமடைந்ததால் வீடு திரும்பினார். மீண்டும் 4 நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

 இதையடுத்து மீண்டும்  மருத்துவமனையில் சேர்ந்தார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், நேற்று அதிகாலை 3 மணிக்கு திடீரென்று  மாரடைப்பு ஏற்பட்டதால் கே.வி.ஆனந்த் மரணம் அடைந்தார். அவரது உடல் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்டு,  வீட்டுக்கு எதிரில் நடுரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டது. மனைவி மற்றும் 2 மகள்கள் அவரது உடலைப் பார்த்து கதறி அழுதனர். பிறகு பெசன்ட்  நகர் மின்மயானத்தில் கே.வி.ஆனந்த் இறுதிச்சடங்கு நடந்தது. அதை தொடர்ந்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

கே.வி.ஆனந்தின் திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.அவருக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன்லால், சூர்யா, விஷால், விஜய் சேதுபதி, தனுஷ், சிம்பு, ஜீவா, இயக்குனர்கள் பாரதிராஜா,  ஷங்கர், கவிஞர் வைரமுத்து, நடிகைகள் ராதிகா, குஷ்பு, தமன்னா, காஜல் அகர்வால், தமிழ் படவுலகை சேர்ந்த சங்கங்கள் மற்றும் விசிக தலைவர்  திருமாவளவன் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு வாரப் பத்திரிகைகளில் போட்டோகிராபராக பணியாற்றிய கே.வி.ஆனந்த், பிறகு தமிழில் வெளியான கோபுர  வாசலிலே, அமரன், மீரா, தேவர் மகன், திருடா திருடா ஆகிய படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். ஒளிப்பதிவாளர்  பி.சி.ராமின் உதவியாளரான அவர், 1994ல் மலையாளத்தில் மோகன்லால் நடித்த தேன்மாவின் கொம்பத்து என்ற படத்தின் மூலம்  ஒளிப்பதிவாளரானார். இப்படத்துக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது.

தொடர்ந்து மலையாளத்தில் மின்னாரம், சந்திரலேகா, தெலுங்கில் புண்யபூமி நா தேசம், தமிழில் காதல் தேசம், நேருக்கு நேர், விரும்புகிறேன்,  முதல்வன், பாய்ஸ், செல்லமே, சிவாஜி, ஹீரோவா? ஜீரோவா, இந்தியில் டோலி சஜா கே ரக்னா, ஜோஷ், நாயக், த லெஜன்ட் ஆப் பகத்சிங், காக்கி  ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். பிறகு திரைப்படம் இயக்குவதில் ஆர்வம் காட்டிய கே.வி.ஆனந்த், ஸ்ரீகாந்த் நடித்த கனா கண்டேன் என்ற படத்தின் மூலம் இயக்குனரானார்.  தொடர்ந்து சூர்யா நடித்த அயன், ஜீவா நடித்த கோ, சூர்யா 2 வேடங்களில் நடித்த மாற்றான், தனுஷ் நடித்த அனேகன், விஜய் சேதுபதி நடித்த  கவண், சூர்யா மற்றும் மோகன்லால், ஆர்யா நடித்த காப்பான் ஆகிய படங்களை இயக்கினார். மீரா, சிவாஜி, மாற்றான், கவண் ஆகிய படங்களில்  சில காட்சிகளில் நடித்தார். சினிமாவை தவிர்த்து கே.வி.ஆனந்துக்கு இயற்கை விவசாயத்தில் ஆர்வம் ஏற்பட்டதால், திருவள்ளூர் மாவட்டம்  ஆரம்பாக்கத்தில் உள்ள பண்ணையை தனது நேரடி பார்வையில் நிர்வகித்து வந்தார்.

Related Stories:

>