வேலூர் மாவட்டத்தில் நேற்று 467 பேருக்கு தொற்று படுக்கைகள் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் தவிப்பு: ஆம்புலன்சிலேயே விடிய விடிய மூதாட்டிக்கு சிகிச்சை

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தினந்தோறும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. நேற்று முன்தினம்  442 பேருக்கு தொற்று உறுதியானது. இது, நேற்று 467 ஆக உயர்ந்துள்ளது. தினந்தோறும் பாதிப்பு எண்ணிக்கை 400ஐ கடந்து வருவதால் அரசு,  தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனைத்து படுக்கைகளும் நிரம்பி உள்ளது. இதனால்,  மருத்துவமனையில் உள்ள  மற்ற வார்டுகளிலும் கொரோனா நோயாளிகளை அனுமதிக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே  ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு மூச்சுத்திணறல் காரணமாக ஒரு மூதாட்டி வேலூர் அரசு  மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்சில் அழைத்துவரப்பட்டார். ஆனால், படுக்கை பற்றாக்குறையால் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை.  இதையடுத்து ஆம்புலன்ஸ்சில் வைத்தே ஆக்சிஜன் விடிய விடிய அளித்து வந்தனர். ஒரு சிலிண்டர் காலியாகி விட்டதால், வேறு ஒரு சிலிண்டரை  மாற்றி ஆக்சிஜன் வழங்கி வந்தனர். இதேபோல் மற்றொரு மூதாட்டியும் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வந்துள்ளார். ஆனால் அவரையும்  மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவரது உறவினர் விடிய விடிய தனது மடியில் படுக்க வைத்திருந்தார். தொடர்ந்து மருத்துவமனையில் படுக்கை பற்றாக்குறையால்  மற்ற நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நேயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

Related Stories:

>