×

கொரோனா பாதிப்பின் அவலங்களுக்கு பொறுப்பேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை பதவியில் இருந்து விலக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை:  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:  கடந்த ஆண்டு பொது ஊரடங்கை அறிவித்த மறுநாள் மார்ச் 25 அன்று பிரதமர் மோடி பேசும் போது, ‘மகாபாரத போர் 18 நாட்களில் முடிந்தது.  ஆனால், கொரோனா ஒழிப்பு போர் 21 நாட்களில் முடிந்துவிடும்’ என்று மிகுந்த நம்பிக்கையோடு பேசினார். இரண்டாவது அலை வேகமாக பாதிப்புகளை ஏற்படுத்துகிற நிலையில் கூட ஏப்ரல் 7 அன்று பிரதமர் மோடி பேசும் போது, ‘கடந்த ஆண்டில்  கொரோனாவை ஒழிப்பதில் எப்படி வெற்றி கண்டோமோ, அதேபோல, இந்த ஆண்டிலும் வெற்றி காண்போம்’ என்று நம்பிக்கையோடு கூறியது எந்த  அடிப்படையில் என்று தெரியவில்லை.

 நாடு இன்று அல்லல்பட்டுக் கொண்டிருக்கிற நிலையை பார்க்கும் போது, அடுத்த இரண்டு மாதங்களில் என்ன நடக்கக் கூடும் என்று  அனுமானிக்கிற குறைந்தபட்ச புரிதல் கூட இல்லாமல் பிரதமர் மோடி இருந்திருக்கிறாரே என்பதை,  மிகுந்த வேதனையோடு சுட்டிக்காட்ட  வேண்டியிருக்கிறது.  எனவே, கொரோனாவின் கோரத் தாண்டவத்தில் சிக்கிக் கொண்டிருக்கிற நாட்டு மக்களை காப்பாற்றுவதற்கு பிரதமர் மோடி முற்றிலும்  தவறிவிட்டார் என்ற குற்றச்சாட்டை கூறுவதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன.  இதற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும்  என்று கூறுகிற அளவிற்கு நாட்டின் நிலைமையை அறியாதவர்கள் அல்ல.

ஆனால், நாடு கொரோனா பாதிப்பினால் எதிர்கொண்டிருக்கிற அனைத்து  அவலங்களுக்கும் பொறுப்பேற்று, குறைந்தபட்சம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனை உடனடியாக பதவியிலிருந்து விலக்கி  வைக்க கேட்டுக் கொள்கிறேன்.
 இந்திய மக்கள் அனைத்து சுகங்களையும் துறந்து, வாழ்வாதாரத்தை இழந்து, எதிர்காலத்தைப் பற்றி கற்பனை கூடச் செய்ய முடியாமல்,  என்றைக்கு நமக்கு கொரோனா தொற்று வருமோ, எப்போது நமது உயிர் பறிக்கப்படுமோ என்ற அச்சத்திலும், பீதியிலும் வாழ்ந்து வருகின்றனர்.  136 கோடி மக்களையும் ஒருசேர மரண பயத்தில் ஆழ்த்தியதற்கு பிரதமர் மோடி பொறுப்பேற்றுக் கொண்டு, குறைந்தபட்சம் மத்திய பாஜ அரசின்  சுகாதாரத்துறை அமைச்சர் உடனடியாக பதவி விலக இதைவிட வேறு என்ன காரணங்கள் வேண்டும்?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Union Health Minister ,KS Alagiri , Union Health Minister should be removed from office to take responsibility for Corona tragedy: KS Alagiri
× RELATED தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்கு...