×

தமிழகம் முழுவதும் 75 மையங்களில் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை: பாதுகாப்புக்கு 1 லட்சம் போலீசார்

சென்னை: தமிழகத்தில் தற்போதைய சட்டப்பேரவையின் பதவி காலம் வருகிற 24ம் தேதி முடிகிறது. இதையொட்டி தமிழகத்தில்  மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிக்கும், கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் 6ம் தேதி  ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு கூட்டணி, அதிமுக தலைமையில் ஒரு கூட்டணி மற்றும் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக  உள்ளிட்ட 5 கட்சிகள் சட்டமன்ற தேர்தலை சந்தித்தன. அதன்படி தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதியிலும் இறுதியாக 3,998 வேட்பாளர்கள்  களத்தில் நின்றனர். தமிழகத்தில் 6 கோடியே 28 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி உள்ளவர்களாக இருந்தாலும், 4 கோடியே 57 லட்சத்து 76 ஆயிரத்து  311 பேர் மட்டுமே வாக்களித்தனர்.

வாக்குப்பதிவு முடிந்ததும், 88,937 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு,  துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் அந்தந்த மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்குள்ள  ஸ்டாங் ரூமில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா மற்றும் கட்சி முகவர்கள்  கண்காணிப்பு என உச்சக்கட்ட பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் நாளை காலை 8 மணிக்கு தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள 75 மையங்களில்  எண்ணப்படுகிறது. சென்னையில் உள்ள 16 தொகுதிகளுக்கான வாக்குகள் ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழக  வளாகத்தில் எண்ணப்படுகிறது. ஒவ்வொரு மையங்களிலும் குறைந்தபட்சம் 14 மேஜைகள் அமைக்கப்பட்டு மின்னணு வாக்கு இயந்திரங்களில்  பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. ஒவ்வொரு மேஜையில் வாக்கு எண்ணும் பணிகளை கண்காணிக்க சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முதல் அடுக்கில் துணை ராணுவ வீரர்களும், 2வது மற்றும் 3  அடுக்கில் மாநில போலீசாரும், 4வது அடுக்கில் (நுழைவாயிலில்) உள்ளூர் போலீசாரும் ஈடுபட்டு இருப்பார்கள். அதன்படி பாதுகாப்பு பணியில்  மட்டும் துணை ராணுவ வீரர்கள், தமிழக போலீசார் என சுமார் ஒரு லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நாளை சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். தொடர்ந்து காலை 8.30  மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கும். ஒவ்வொரு தொகுதியிலும் எந்த வேட்பாளர்  முன்னணியில் உள்ளார் என்ற விவரம் நாளை காலை 9 மணி முதல் தெரியவரும். வாக்கு எண்ணும் பணியில் மட்டும் 16,387 பேர்  ஈடுபடுகிறார்கள்.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும்  அரசு ஊழியர்கள், வேட்பாளர்கள், அரசியல் முகவர்கள்,  பத்திரிகையாளர்கள் என  அனைவரும் 2 கட்ட தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் அல்லது கொரோனா பரிசோதனை செய்ததற்கான சான்றிதழ்  இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். உடல்வெப்ப நிலை பரிசோதனையில் 98.5 டிகிரிக்கு  குறைவாக இருந்தால் மட்டுமே உள்ளே  அனுமதிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகும், பட்டாசு உள்ளிட்ட வெற்றி கொண்டாட்டத்துக்கும் தேர்தல் ஆணையம் தடை  விதித்துள்ளது.

4,420 மேஜைகளில்...

தமிழகத்தில் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இதற்காக ஒவ்வொரு மையத்திலும் குறைந்தபட்சம் 14 மேஜைகள்  போடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 75 வாக்குப்பதிவு மையங்களிலும் 3,372 மேஜைகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில்  பதிவான வாக்குகள் எண்ணப்படும். 309 மேஜைகளில் தபால் வாக்குகள் எண்ண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 4,420 மேஜைகளில்  வாக்கு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.



Tags : Tamil Nadu , Counting of votes in 75 centers across Tamil Nadu tomorrow at 8 am: 1 lakh police for security
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...