×

கழிவு நீரால் உறுதி இழக்கும் நெய்யாறு இடதுகரை சானல் மண்சரிவால் போக்குவரத்துக்கு தடை: கிராம மக்கள் கடும் அவதி

களியக்காவிளை: களியக்காவிளை அருகே ஒற்றாமரம் பகுதியில் நெய்யாறு இடதுகரை சானல் செல்கிறது. அதன் இருபுறங்களிலும் ரோடு செல்கிறது. இந்த ரோட்டில் வாகனங்கள் அதிகம் இயக்கப்பட்டு வருகின்றன. சானலின் ஒருபக்கம் செல்லும் ரோடு நெடுவிளை கிராமத்திற்கு செல்கிறது. நூற்றுக்கணக்கான குடும்பங்களை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் களியக்காவிளை, குழித்துறைக்கு வருவதற்கு இந்த ரோட்டைத்தான் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக நெய்யாறு இடதுகரை சானல் பராமரிப்பின்றி காணப்படுகிறது.

கழிவுநீர் குட்டையாக தற்போது காட்சியளிக்கிறது. அந்த பகுதி மக்களும் கழிவுநீரை பைப் மூலம் சானலில் விடுகின்றனர். இந்த நிலையில் வீடுகளில் இருந்து பாயும் கழிவுநீரால் சானலின் பக்கவாட்டில் உள்ள மண் உறுதித்தன்மையை இழந்து நிற்கிறது. இது ஒருபுறம் இருக்க ஒற்றாமரம் பகுதியில் இருந்து நெடுவிளைக்கு சாலை திரும்பும் இடத்தில் திடீர் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த ரோடும் மண்சரிவில் சிக்கியது. தற்போது அந்த ரோடு மக்களின் பயன்பாட்டிற்கு இயலாத நிலையில் காணப்படுகிறது. இரவு நேரங்களில் அந்த வழியாக வரும் குடிமகன்கள் விழுந்து எழும்பி செல்வது தொடர்கதையாகி வருகிறது.

இந்த பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவை சீரமைத்து ரோட்டை மக்கள் பயன்படுத்தும் வகையில் சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Neyyar , Neyyar left bank channel landslide obstructs traffic: Villagers suffer
× RELATED கேரளாவில் நெய்யாறு பகுதியில்...