புதுவை அரசு பொது மருத்துவமனையில் நவீன ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் துவக்கம்: நிமிடத்திற்கு 700 லிட்டர் உற்பத்தி செய்யலாம்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் ரூ.1 கோடி செலவில் புதிதாக ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. நாடு முழுக்க கொரோனா 2ம் அலை கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், தினமும் ஏராளமான நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், ஆக்சிஜன் பற்றாக்குறை முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நோயாளிகள் இறந்து வரும் வீடியோ காட்சிகள் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. இந்நிலையில் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் பிஎம்கேர் நிதியின் கீழ் சுமார் ரூ.1 கோடி செலவில் புதிதாக ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையில் ஏற்கனவே திரவ ஆக்சிஜன் இருப்பு வைக்கப்பட்டு நோயாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது டேங்கர் லாரி மூலம் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டு இங்கு நிரப்பி வைக்கப்படுகிறது. இருந்தபோதும் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு புதிய நவீன முறையிலான ஆக்சிஜனை உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் உள்ள நவீன இயந்திரம் காற்றில் உள்ள ஆக்சிஜனை பிரித்தெடுத்து உற்பத்தி செய்து நோயாளிகளுக்கு விநியோகிக்கும். இந்த இயந்திரம் எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும். மின்சாரம் இருந்தால் போதும். நிமிடத்திற்கு 700 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும்.

இந்த புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் வாசுதேவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறும்போது, இந்த கொரோனா கால கட்டத்தில் ஆக்சிஜனின் தேவை அதிகம் உள்ளது. நமது மருத்துவமனையில் ஏற்கனவே திரவ ஆக்சிஜன் போதுமான அளவில் உள்ளது. இதைக் கொண்டு இங்குள்ள அனைத்து படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் வழங்க முடிகிறது. இருந்தபோதும் மேலும் பிரச்னை ஏதும் வராமல் இருக்க, இந்திய அரசிடம் கேட்டு பிஎம் கேர் (பிரதமர் நிவாரணம்) நிதியின் கீழ் இந்த புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு, காற்றின் மூலம் நிமிடத்திற்கு 700 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். இதை நோயாளிகளுக்கு தடையின்றி வினியோகிக்க முடியும். இது, தொடர்ச்சியாக இயங்கும். மின்சாரம் இருந்தால் போதும். இங்கு எப்போதும் மின்சாரம் இருப்பதால் எதுவும் பிரச்னை இல்லை. மின்சாரம் இல்லாத நேரத்தில் ஜெனரேட்டர் மூலம் இயக்கி தொடர்ச்சியாக ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும் என்றார்.

Related Stories: