வேகமெடுக்கும் கொரோனா பரவல்!: டெல்லிக்கு தேவையான தடுப்பூசிகள் இதுவரை கிடைக்கவில்லை..அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

டெல்லி: டெல்லியில் நாளை செலுத்தப்பட உள்ள கொரோனா தடுப்பூசிகள் இதுவரை வந்துசேரவில்லை என்று அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா 2ம் அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இது வடமாநிலங்களில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆயிரக்கணக்கில் உயிரிழக்கின்றனர். குறிப்பாக டெல்லியில் கொரோனாவின் தாக்கம் உச்சமடைந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. 

இந்நிலையில், டெல்லிக்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் இதுவரை கிடைக்கவில்லை என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நாளை முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஆனால் இதுவரை டெல்லிக்கு தேவையான மருந்துகள் கிடைக்கவில்லை என்று என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக மருந்து நிறுவனங்களிடம் பேசி வருவதாகவும் விரைவில் தடுப்பூசிகள் கிடைக்கும் என்று நம்புவதாக அவர் கூறியுள்ளார். 

மேலும் அடுத்த 3 மாதத்திற்குள் டெல்லியில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்திக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்றும் அனைவருக்கும் மருந்து நிச்சயம் கிடைக்கும் என்றும் உறுதிபட கூறியுள்ளார். இதனிடையே டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. அதேபோல் பீகார் தலைமை செயலாளர் அருண்குமார் சிங்கிற்கும் தொற்று உறுதியாகியுள்ளது. 

Related Stories:

>