×

நடிகர் சித்தார்த்திற்கு மிரட்டல் விடுத்த பாஜகவினர் மீது கடும் நடவடிக்கை: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: உ.பி.யில் ஆக்சிஜன் இல்லை என்று யாராவது பிரசாரம் செய்தால், அவர்களது சொத்துகள் பரிமுதல் செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்திருந்தார். இதற்கு பதிலளித்து ட்வீட் செய்த சித்தார்த், ‘பொய் சொல்வது சாமானிய மனிதனோ, சாமியாரோ, தலைவரோ, யாராக இருந்தாலும் கன்னத்தில் விழும் அறையை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்’ என்று கடுமையாக கருத்துக்களை பகிர்ந்திருந்தார். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பும், பாராட்டும் கிடைத்தது.

இந்நிலையில், சித்தார்த்தின் தொலைப்பேசி எண்ணை வெளியிட்டு, அவரை விமர்சித்து துன்புறுத்துமாறு தங்கள் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மூலம் தமிழக பாஜவினர் கேட்டு கொண்டனர். இதனையடுத்து, சித்தார்த், ‘500க்கும் மேற்பட்டோர் என் செல்பேசி எண்ணுக்கு போன் செய்து, குடும்பத்தாருக்கு போன் செய்து, கொலை செய்து விடுவோம் என்றும் பாலியல் வன்முறையில் ஈடுபடுவோம் என்றும் மிரட்டுகிறார்கள் என ட்வீட் செய்திருந்தார். இதை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் டேக் செய்துள்ளார். காவல் துறையிலும் புகார் செய்துள்ளார்.

பாஜ அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை பயமின்றி விமர்சித்து வருபவர் சித்தார்த். நடித்து கிடைக்கும் வருவாயில் சொகுசாக வாழ்ந்துவிட்டு போகும் நடிகர்கள் மத்தியில், சமூகத்தின் மீது இருக்கும் பற்று காரணமாகவே இத்தகைய கருத்துகளை வெளிப்படுத்துகிறார். அதற்கு பதிலளிக்கத் திராணியற்ற பாஜவினர் இது போன்ற கேவலமான வன்முறையை கையில் எடுத்திருக்கிறார்கள். பாசிச ஜனநாயக விரோத அணுகுமுறையை கொண்டுள்ள பாஜவினர், இத்தகைய  பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சம்மந்தப்பட்ட பாஜவினர் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : BJP ,Siddharth ,KS Alagiri , Strict action against BJP for threatening actor Siddharth: KS Alagiri insists
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...