×

ஏமாற்றமே மிச்சம்!: அரசின் சிறப்பு நிதி உதவி, காப்பீட்டு திட்டங்கள் இல்லை..கொரோனா வார்டில் பணிபுரியும் முன்கள பணியாளர்கள் குமுறல்..!!

சென்னை: அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு வார்டுகளில் பணியாற்றும் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அரசின் சிறப்பு நிதி உதவிகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இது உயிரை பணயம் வைத்து பணியாற்றும் முன்கள பணியாளர்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கொரோனா முதல் அலையின் போது முன்கள பணியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக நாடே கைதட்டியது; மணி அடித்தது. அதனால் உற்சாகமடைந்த அவர்கள் உயிரை துச்சமாக மதித்து களம்கண்டனர். கொரோனாவை வென்றெடுக்க அரசுக்கு துணை நின்றனர். 


தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு ஒரு மாத ஊதியம் சிறப்பு நிதியுதவியாக அளிக்கப்படும் என கடந்த ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். ஓராண்டு ஆகியும் அந்த பலன் இன்னும் அவர்களுக்கு கிடைக்கவிலை. தற்போது கொரோனா 2வது அலையால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. குவியும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் இல்லாமல் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளை காப்பாற்றும் பணியில், இளநிலை பயிற்சி மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவர்களின் பங்கும் அதிகம். 


அவர்களுக்கான மாதாந்திர உதவித் தொகையை அரசு வழங்காமல் நிறுத்தி வைத்திருப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர். உதவித் தொகையை உடனே வழங்கக்கோரி சென்னையில் ராஜீவ் காந்தி, ஸ்டான்லி மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைகளில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.  கடலூர், கோவை என மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இதே நிலை உள்ளது. மருத்துவர்களின் உயிர் பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்த அரசை வலியுறுத்தி உள்ளனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகளில் பிற சிகிச்சை பிரிவுகள் இயங்காததால் கொரோனா சிகிச்சையில் மட்டுமே மருத்துவ மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 


தொற்றுக்கு ஆளானதையும் பொருட்படுத்தாமல் பணி செய்த அவர்களுக்கு அரசு பாராட்டி சான்றிதழ் வழங்கும் என்ற எதிர்பார்ப்பிலும் ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. கொரோனா முதல் அலையின் போது தரப்படாத என் 95 மாஸ்க் மற்றும் கவச உடைகள் இரண்டாவது அலையில் கிடைப்பது சற்று ஆறுதல் தந்தாலும் அரசின் நிதி உதவியை மட்டும் நம்பி இருக்கும் மாணவர்களின் கதி கேள்விக்குறியாகியுள்ளது. 



Tags : Corona Ward , Government Special Financial Assistance, Insurance Schemes, Corona, Frontline Employees
× RELATED கொரோனா வார்டில் உள்ள நோயாளிகளுக்கு...