தேவையின்றி ரெம்டெசிவிர் கொடுத்தால் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை ரெம்டெசிவிர் இல்லாவிட்டால் உயிர்போகும் என்ற தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்: சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை

சென்னை: தனியார் மருத்துவமனைகள் புரட்டோக்காலை மீறி ரெம்டெசிவிரை தேவையில்லாமல் நோயாளிக்கு கொடுத்தால் நடவடிக்கை எடுக்க கூடிய நிலை ஏற்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். சென்னை எழும்பூர் தாய் சேய் மருத்துவமனையில் கோவிட்-19 சிகிச்சைக்காக புதிதாக தயார் நிலையில் உள்ள 250 படுக்கைகள் மற்றும் கோவிட-19 தொற்று ஏற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கான பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள 60 படுக்கைகளையும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், அவர் கூறியதாவது: ஆக்சிஜன் படுக்கைகளின் தேவை அதிகம் தேவை என்பதால் 12,852 கூடுதல் படுக்கைகள் போர் கால அடிப்படையில் முதல்வர் தயார் செய்ய சொன்னார். அதில் 576 படுக்கைகள் கடந்த இரண்டு நாட்களில் தயார் செய்துவிட்டோம். நாளை 3,076 படுக்கைகள் கைவசம் வரும். 7ம் தேதிக்குள் 8,225 படுக்கைகள் தயார் நிலையில் இருக்கும். ரெம்டெசிவிர் மருந்தை அரசே கொடுக்க முடிவு செய்துள்ளது. கீழ்ப்பாக்கத்தில் 3 ஆயிரத்துக்கும் குறைவான பேர் தான் வருகின்றனர். நமக்கு 56 ஆயிரம் ஊசி மருந்து வருகிறது. அதில் ஒரு வாரத்துக்கு 18 ஆயிரம் விற்பனையாகாது. இதுவரை 6 ஊசி மருந்துகளை கொண்ட ஒரு பெட்டி தான் விற்பனை ஆகி உள்ளது.

ரெம்டெசிவிர் மேஜிக் மருந்து கிடையாது. தனியார் மருத்துவமனைகள் ரெம்டெசிவிரை தேவையில்லாமல் கொடுத்தால் நடவடிக்கை எடுக்க கூடிய நிலை ஏற்படும். ரெம்டெசிவிர் இல்லையென்றால் உயிர் போய்விடும் என்று தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். இரண்டு நாட்களுக்குள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 500 படுக்கைகள் 6,7,8 மாடிகளில் தயார் நிலையில் உள்ளது. இன்று முதல் 900 முதுகலை பட்டம் பெற்றவர்கள் பணியில் ஈடுபடுத்தவுள்ளோம். கடந்த வாரம் 354 டாக்டர்கள் பணியிடம் நிரப்பப்பட்டுள்ளது.

மேலும் மினிகிளினிக்கில் உள்ள 1,500 க்கும் மேற்ப்பட்ட டாக்டர்களை கோவிட் கேர் சென்டருக்கு பணியாற்ற மாற்றியுள்ளோம். அதைபோன்று செவிலியர்கள் சென்னைக்கு 500 பேர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களுக்கு 500 பேர் நியமிக்கப் பட்டுள்ளனர். அதைப்போன்று கோவை போன்ற இடங்களில் செவிலியர்கள், மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர். தனியார் நர்சிங் பயிற்சி கல்லூரியில் பணியாற்றி இருந்தால் அவர்களை தேர்வு செய்து பணி ஆணை உடனடியாக வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>