கடலோர கிராம மக்கள் அச்சம் நெல்லை, குமரியில் லேசான நிலஅதிர்வு: பல இடங்களில் உணரப்பட்டது

நெல்லை: கன்னியாகுமரியிலிருந்து கிழக்கே சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் 2.7 ரிக்டர் அளவு நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் நெல்லை, குமரி மாவட்டத்தின் கிராமங்களிலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.  அசாம் மாநிலத்தின் சோனித்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை பயங்கர நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 6.7 புள்ளிகளாக பதிவானது. இந்த நில அதிர்வு வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டது. இந்நிலையில் நெல்லை மாவட்ட கடற்கரை பகுதிகளான கூடங்குளம், பெருமணல் மற்றும் சுற்று வட்டார கடற்கரை பகுதி கிராமங்களிலும் வள்ளியூர் சுற்றுவட்டார பகுதியிலும் நேற்று பிற்பகல் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இதுபோல் அருகே உள்ள மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரம், மருங்கூர், அஞ்சுகிராமம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியானது.

கன்னியாகுமரியிலிருந்து கிழக்கே சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் ஏற்பட்ட 2.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில அதிர்வின் எதிரொலியாக, நெல்லை மாவட்ட கிராமங்களிலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். சுமார் 5 விநாடிகள் நீடித்த இந்த அதிர்வால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இந்த நிலஅதிர்வு குறித்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் புவி தொழில்நுட்பவியல் (ஜியோ டெக்னாலஜி) துறையில் செயல்படும் நிலஅதிர்வு ஆய்வு மையத்தில் பதிவு ஏதும் இல்லை என துறையின் தலைவர் பேராசிரியர் சீனிவாசன் கூறினார். அவர் கூறுகையில், சென்னையில் உள்ள ஐஎம்டி அல்லது ஐதாராபாத், உ.பியில் உள்ள ஆய்வு மையத்தில் பதிவாகி இருக்க வாய்ப்புள்ளது என்றார்.

Related Stories:

>