×

23 ஆண்டுகளுக்கு பிறகு வைத்தீஸ்வரன் கோயிலில் கும்பாபிஷேகம்: பக்தர்களின்றி நடந்தது

சீர்காழி: வைத்தீஸ்வரன் கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு  கும்பாபிஷேகம் பக்தர்களின்றி நேற்று நடந்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் வைத்தியநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. நவக்கிரகங்களில் செவ்வாய் ஸ்தலமாக கருதப்படும் இந்தக்கோயிலை 500 ஆண்டுகால பழமைவாய்ந்த சைவத்திருமடமான தருமை ஆதீனம் நிர்வகித்து வருகிறது. இங்கு மூலவராக வைத்தியநாத சுவாமியும், தையல்நாயகி அம்மனும் அருள்பாலிக்கின்றனர். இந்த ஆலயத்தின் குடமுழுக்கு கடைசியாக 1998ம் ஆண்டு நடந்தது. ஆகம விதிகளின்படி, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு செய்ய வேண்டும். எனினும் குடமுழுக்கு நடைபெறவில்லை. தீவிர முயற்சிக்குபின் கடந்த 2 ஆண்டாக நடந்த திருப்பணி நிறைவுபெற்றதையடுத்து, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.

இதையொட்டி எட்டு கால யாகசாலை பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி முடிந்ததை தொடர்ந்து, நேற்று காலை 7.40 மணியளவில் ஆதி வைத்தியநாதர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன், விநாயகர், முருகன், நடராஜர் ஆகிய 6 சன்னதிகளின் விமான கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு நடத்தினர். இதில் தருமை ஆதீன 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமச்சாரிய சுவாமிகள் மற்றும் உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரி விக்ராந்த் ராஜா, சென்னை உயர்நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞர் கார்த்திகேயன், கலெக்டர் லலிதா, எஸ்.பி ஸ்ரீநாதா மற்றும் கோயில் ஊழியர்கள் பங்கேற்றனர். கொரோனா காரணமாக பக்தர்கள் யாரும் விழாவில் கலந்து கொள்ளவில்லை.

Tags : Vaitheeswaran Temple , Kumbabhishekam at Vaitheeswaran Temple after 23 years: It took place without devotees
× RELATED வைத்தீஸ்வரன்கோயிலில் கும்பாபிஷேகம்...