நடுக்கடலில் மாயமானவர்கள் மீட்பு 11 மீனவர்களுடன் விசைப்படகு நாளை தேங்காப்பட்டணம் வருகிறது: இந்திய கடலோர காவல்படை தகவல்

நாகர்கோவில்: லட்சத்தீவு அருகே குமரி மாவட்டத்தை சேர்ந்த 11 மீனவர்களுடன் மீட்கப்பட்ட விசைப்படகு நாளை தேங்காப்பட்டணம் துறைமுகம் வந்து சேரும் என்று இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. குமரி மாவட்டம் வள்ளவிளை பகுதியை சேர்ந்த ‘‘மெர்சிடஸ்’’ என்ற விசைப்படகில் கடந்த 9ம் தேதி இரவு தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 11 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். ஆழ்கடலில் இவர்களது விசைப்படகு மூழ்கியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்தநிலையில் இவர்கள் லட்சத்தீவு அருகே மீட்கப்பட்டுள்ளனர். நடுக்கடலில் நடந்தது என்ன என்பது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன் விபரம் வருமாறு: வள்ளவிளையில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மே 6ம் தேதி  கரை சேர திட்டமிட்டிருந்தனர். விசைப்படகில்  உரிமையாளர் ஜோசப் பிராங்கிளின் உள்ளிட்ட 11 பேர் இருந்தனர். கடந்த 23ம் தேதி நள்ளிரவில் கோவாவில் இருந்து 600 நாட்டிக்கல் மைல் தொலைவில் விசைப்படகு மீது கப்பல் மோதியதாக தெரிகிறது. இதில் விசைப்படகின் இயந்திரம் இருந்த பகுதியும், கட்டுப்பாட்டு பகுதியான வீல் ஹவுசின் கேபின் முன் பாகமும் உடைந்து கடலில் விழுந்தது. உடனிருந்த 2 சிறு படகுகளில் ஒன்றும் உடைந்து மூழ்கியது. அதில் இருந்த 3 பேரை மற்றவர்கள் காப்பாற்றினர். பின்னர் அவர்களை விசைப்படகில் ஏற்றியுள்ளனர்.

மறுநாள் கட்டுப்பாட்டை இழந்து கடலில் படகு சென்றுகொண்டிருந்தது. சாட்டிலைட் போன் பழுதானதால் யாரையும் தொடர்பு கொள்ள இயலவில்லை. இதனால்தான் படகு மூழ்கிவிட்டதாக தகவல் பரவியது. இதனை தொடர்ந்து வள்ளவிளை மீனவர்கள் 10 விசைப்படகுகளிலும், இந்திய கடலோர காவல்படையின் ‘‘சமுத்திர உபகாரி’’ என்ற கப்பலும் தேடுதலை தொடங்கியது. 27ம் தேதி கப்பல் படையின் கப்பல் மற்றும் விமானங்கள் தேடுதலில் இணைந்தன. இந்தநிலையில் ‘‘மெர்சிடஸ்’’ விசைப்படகின் உரிமையாளர் ஜோசப் தனது மனைவியை போனில் அழைத்து அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனை தெடர்ந்து கடலோர காவல்படையினர்  லட்சத்தீவு அருகே நடுக்கடலில் உடைந்த படகுடன் தத்தளித்த இவர்களை கண்டுபிடித்தனர். இந்திய கடலோர காவல்படை வெளியிட்டுள்ள செய்தியில் இந்திய கடலோர காவல்படையின் கப்பல் ‘‘விக்ரம்’’ பாதுகாப்புடன், விசைப்படகு ‘‘மெர்சிடஸ்’’ மற்றும் அதில் உள்ள 11 மீனவர்களுடன் லட்சத்தீவில் இருந்து கரை திரும்பி வருவதாகவும், தேங்காப்பட்டணம் துறைமுகத்தை மே 1ம் தேதி வந்தடைய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: