×

உ.பி முதல்வர் குறித்து சர்ச்சை கருத்து நடிகர் சித்தார்த்துக்கு கொலை மிரட்டல்

சென்னை: நடிகர் சித்தார்த் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக இயங்கி வருகிறார். தற்போது கொரோனா 2வது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், நாடு முழுவதும் கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, உ.பி மாநிலத்தில் இருக்கும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகமாக இருக்கிறது. இந்நிலையில், ‘உ.பி மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. அப்படி இருப்பதாக யாராவது சொன்னால், அவர்கள் மீது வழக்கு தொடரப்படும். சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்’ என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதுதொடர்பாக தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்த சித்தார்த், ‘பொய் சொல்வது சாமான்ய மனிதரோ, ஆன்மிக குருவோ அல்லது தலைவரோ, யாராக இருந்தாலும் சரி. அறை விழுவதை சந்திக்க வேண்டியது வரும்’ என்று சூசகமாக குறிப்பிட்டிருந்தார். இதற்கு பாஜ கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுகுறித்து சித்தார்த் தனது டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘எனது போன் நம்பரை லீக் செய்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்திற்குள் எனக்கும், என் குடும்பத்தினருக்கும் கொலை மற்றும் பலாத்கார மிரட்டல்கள் விடுக்கப்பட்டு 500 போன்கள் வந்தது. அந்த போன் நம்பர்கள் மற்றும் சமூக வலைத்தள ஐடிகளை போலீசாரிடம் கொடுத்துள்ளேன். இதுபோன்ற மிரட்டல்களால் நான் வாய் மூடிக்கொண்டு இருக்கப் போவதில்லை. முடிந்தால் முயற்சித்துப் பார்க்கட்டும்’ என்று கூறியுள்ளார்.

Tags : UP CM ,Siddharth , Controversial comment on UP CM: Death threat to actor Siddharth
× RELATED மஹாவீர் ஜெயந்தி, மே தினத்தில் டாஸ்மாக் விடுமுறை