வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 10 ஆம்புலன்சுகளில் விடியவிடிய காத்திருந்த கொரோனா நோயாளிகள்: படுக்கை வசதி இல்லை என குற்றச்சாட்டு

வேலூர்: வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 10 ஆம்புலன்சுகளில் படுக்கை வசதி இல்லாமல் விடியவிடிய கொரோனா நோயாளிகள் காத்திருந்தனர். வேலூர் மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடியவிடிய 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகளில் கொரோனா நோயாளிகள் காத்திருந்ததாகவும், அவர்களுக்கு போதிய படுக்கை மற்றும் மருத்துவ வசதி செய்யாமல் அலைக்கழித்ததாகவும் தகவல் பரவியது. மேலும் நோயாளிகளுக்கு எந்தவிதமான சிகிச்சையும் அளிக்காமல் வாகனத்திலேயே வைத்திருந்தனர். இதனால் அவர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

காலை 6 மணிக்கு பிறகு கொரோனா நோயாளிகளை ஒவ்வொருவராக உள்ளே அனுமதித்தனர். இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் செல்வி கூறுகையில், அவசர சிகிச்சை பிரிவில் காலையில் காத்திருந்தவர்கள் கொரோனா நோயாளிகள் அல்ல. பொதுநோயாளிகள்தான். ஒரே நேரத்தில் 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் வரும்போது இதுபோன்ற பிரச்னை ஏற்படுகிறது. மே 2வது வாரத்தில் வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுவதால் படுக்கை வசதிகளை அதிகரித்து வருகிறோம் என்றார்.

தரையில் படுத்து கிடக்கும் நோயாளிகள்: திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் 233 பேருக்கு கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டனர். இதனால், அங்குள்ள 700 படுக்கைகளும் நிரம்பி வார்டுக்கு வெளியே, நோயாளிகளை பாய் விரித்து படுக்க வைத்துள்ளனர். கட்டில், படுக்கை வசதி இல்லாததால் அவர்கள் அவதிப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் கூடுதல் படுக்கை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>