×

அமெரிக்கா போட்டியை மட்டுமே விரும்புகிறது சீனாவுடன் மோத விரும்பவில்லை: நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பைடன் முதல் பேச்சு

வாஷிங்டன்: `சீனா, ரஷ்யாவுடன் அமெரிக்கா போட்டியை விரும்புகிறதே, மோதலை விரும்பவில்லை,’ என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்று கொண்ட ஜோ பைடன், 100 நாள் ஆட்சியை நிறைவு செய்துள்ளார். இதை முன்னிட்டு, நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் நேற்று அவர் உரையாற்றினார். அதில், தனது நாட்டுக்கு மிகப்பெரிய போட்டியாக உருவெடுத்துள்ள சீனாவை பற்றியும், பழைய எதிரி ரஷ்யாவை பற்றியும் குறிப்பிட்டு அவர் பேசியதாவது: பதவியேற்ற பிறகு சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் முதல் முறையாக பேசினேன். அப்போது, `சீனா, ரஷ்யாவுடன் அமெரிக்கா போட்டியையே விரும்புகிறது; மோதலை விரும்பவில்லை. அதே நேரம், அமெரிக்காவின் நலன் சார்ந்த எந்தவொரு விஷயத்திலும், அமெரிக்கா தன்னை பாதுகாத்து கொள்ளும்’ என்று தெளிவாக எடுத்து கூறினேன்.  

அமெரிக்காவில் அதிக முதலீடு செய்யும் அளவுக்கு சீனா வளர்ந்து வரும் நிலையில், மோதுவதற்கான வாய்ப்பை அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை. அதே நேரம், உலகின் இரு வல்லரசுகளான சீனா, ரஷ்யாவை எதிர்ப்பதில் அமெரிக்கா உறுதியான நிலைப்பாட்டுடன் இருக்கும். அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள், அமெரிக்கர்கள் மற்றும் தொழில் துறையினருக்கு வழங்கப்படும் மானியத்தை நிறுத்துதல், அமெரிக்க தொழில்நுட்பத்தின் அறிவுசார் சொத்துகளை திருடுதல் போன்ற சீனாவின் அநியாயமான வர்த்தக முறைகேடுகளுக்கு எதிராக அமெரிக்கா குரல் கொடுக்கும்.

நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு, இருநாடுகளும் விடுக்கும் அச்சுறுத்தல்களுக்கு தூதரக ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தீர்வு காணப்படும்.அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையீடு, அமெரிக்க வலைதள ஹேக்கிங், எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னிக்கு விஷம் கொடுத்தது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து ரஷ்யாவிடம் இருந்து விளக்கம் கோரப் போவதில்லை. அதே நேரம், இந்த நடவடிக்கைகளுக்கான விளைவுகளை ரஷ்யா எதிர்கொள்ள வேண்டும் என்று அதிபர் புடினிடம் விளக்கப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

* இந்தோ-பசிபிக்கில் ஆதிக்கம் நீடிக்கும்
பைடன் தனது பேச்சில் மேலும், ``ஐரோப்பிய நாடுகளில் எப்படி நேட்டோ படைகள் பராமரிக்கப்படுகிறதோ, அதே போன்று இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை கண்காணிக்க அப்பகுதியில் வலுவான படைகளை அமெரிக்கா நிறுத்தும். இது மோதலை ஏற்படுத்துவதற்காக அல்ல; அது தடுப்பு நடவடிக்கை மட்டுமே,’’ என்றார்.

* வரலாறு படைத்த ஹாரிஸ், பெலோசி  
நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் பைடன் உரையாற்றிய போது, துணை அதிபர் கமலா ஹாரிஸ், சபாநாயகர் நான்சி பெலோசி அவரது பின்புறம் மேடையில் ஒன்றாக அமர்ந்திருந்தனர். அமெரிக்க நாடாளுமன்ற வரலாற்றில் 2 பெண் தலைவர்கள், அதிபருடன் மேடையை பகிர்ந்து கொண்டது இதுவே முதல் முறையாகும்.

* கமலா ஹாரிஸ் குறித்து தவறான செய்தி பிரசுரம்
அமெரிக்க துணை அதிபரான கமலா ஹாரிஸ் கடந்த 2019ல் ‘எங்கேயும் சூப்பர் ஹீரோக்கள்’ என்ற குழந்தைகள் புத்தகத்தை எழுதினார். அந்த புத்தகம், கலிபோர்னியாவின் லாங் பீச் பகுதியில் உள்ள முகாமில் புலம்பெயர் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ‘வெல்கம் கிட்’-ல் வைத்து தரப்பட்டதாக நியூயார்க் போஸ்ட் நாளிதழில் செய்தி வெளியானது. சுமார் 10000 புத்தகங்கள் வழங்கப்பட்டதாகவும், கமலா ஹாரிசுக்காக அரசு பணம் செலவழிக்கப்பட்டதாகவும் அந்த செய்தி குறித்து விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் உண்மையிலேயே அங்கு நடந்த நிகழ்ச்சியில் ஒரே ஒரு புத்தகம் மட்டுமே தரப்பட்டுள்ளது. இதனால் தவறான செய்தி வெளியிட்ட நியூயார்க் போஸ்ட் நிருபர் லாரா இட்டாலியானோ தனது வேலையை ராஜினாமா செய்தார். அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘உத்தரவின் பேரில் பொய் செய்தியை தந்தேன்’ என கூறியது சர்ச்சையாகி உள்ளது. ஆனால் யார் உத்தரவிட்டது என்பதை இட்டாலியானோ வெளியிடவில்லை.

Tags : America ,China ,Biden , America only wants competition, not conflict with China: Biden's first speech at a joint parliamentary session
× RELATED சீனா குறித்த மோடியின் பதில்...