×

கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பிய வழக்கு நடிகர் மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன்: தடுப்பூசி கொள்முதல் செய்ய ரூ.2 லட்சம் செலுத்த நீதிபதி உத்தரவு

சென்னை: நடிகர் விவேக், கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட மறுநாள் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் மரணம் அடைந்தார். இந்நிலையில், விவேக் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு வந்திருந்த நடிகர் மன்சூர் அலிகான், நிருபர்களிடம் பேசியபோது, கொரோனா தொற்று என்று இல்லாத ஒன்றை இருப்பதாக மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பொய் சொல்லி வருவதாகவும், யாரும் முகக்கவசம் அணிய தேவையில்லை எனவும் கொரோனா தடுப்பூசி குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, மன்சூர் அலிகான் மீது கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அலுவலர் பூபேஷ், வடபழனி போலீசில் புகார் செய்தார். அதனடிப்படையில், அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரி, செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 23ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். மனுவில், தனது பேட்டியை மாநகராட்சி ஆணையர் தவறாக புரிந்து கொண்டுள்ளார். உள்நோக்கத்தோடு வேண்டும் என்று தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பவில்லை. கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கட்டாயப்படுத்த கூடாது என்றுதான் கூறினேனே தவிர, தடுப்பூசி குறித்து தவறாக எதுவும் தெரிவிக்கவில்லை’ என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மன்சூர் அலிகான் தரப்பில் ஆஜரான வக்கீல் ராதாகிருஷ்ணன், திட்டமிட்டு கருத்துக்களை அவர் தெரிவிக்கவில்லை எனவும் தன்னை அறியாமல் அவர் பேசி விட்டதாகவும், அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் எடுத்துரைத்தார். இதை ஏற்று கொண்டு நீதிபதி, ‘இதுபோன்ற தேவையற்ற வதந்திகளையும், மக்களிடையே அச்சத்தையும், பதற்ற நிலையையும் ஏற்படுத்த கூடாது. அறிவியல் தொழில்நுட்பத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர், செவிலியர், சுகாதார பணியாளர்களின் நிலையை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும்.  தடுப்பூசி குறித்து புரளி பரப்பவோ, பதற்றத்தை ஏற்படுத்தவோ கூடாது. எனவே, பொதுமக்களுக்கான கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கு சுகாதார துறை செயலாளர் பெயரில் ரூ.2 லட்சம் வரைவோலையை மனுதாரர் வழங்க வேண்டும்’ என்ற நிபந்தனையுடன் மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

Tags : Mansoor Ali Khan , Actor Mansoor Ali Khan granted pre-bail in defamation case over corona vaccine
× RELATED சின்னத்துக்காக தேர்தல் கமிஷன்...