×

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கோயில் உண்டியல் திறப்பு பணியில் 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பங்கேற்க தடை: 20 பேர் வரை பங்கேற்கலாம்

சென்னை: கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கோயில்களில் உண்டியல் திறக்கும் போது 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ராஜாமணி அனைத்து கோயில் அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு கோயிலின் நலன் கருதி கோயில்களில் உள்ள உண்டியல்களை கோயில்களின் பணியாளர்கள் மட்டுமல்லாது பொதுமக்களுடன் சேர்ந்து 20 பேர்கள் மட்டும் கலந்து கொண்டு உண்டியல் திறப்பு மேற்கொள்ளப்பட வேண்டும்.

* ஒரு நாளில் 20 பேருக்கு மிகாமல் உண்டியல் திறப்பில் கலந்து கொள்ளும் போது, எவ்வளவு உண்டியல்கள் திறந்து கணக்கிட முடியும் என்பதை உத்தேசமாக கணிக்கிட்டு அதற்கேற்றாற் போல் பல்வேறு நாட்களில் பல்வேறு கட்டங்களாக உரிய அலுவலரிடம் முன்கூட்டியே அனுமதி பெற்று உண்டியல் திறப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். உண்டியல் திறப்புக்கான அனுமதி வேண்டும் தேதிகள் தெளிவாக குறிப்பிட வேண்டும்.
* உண்டியல் திறப்பு ஆரம்பம் முதல் முடியும் வரை கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்ய வேண்டும். மேலும், உண்டியல் திறப்பு நிகழ்வு முறையாக மேற்கொள்வதையும், வெளிப்படைத் தன்மையினை உறுதி செய்யவும் தனித்திரையில் ஒளிபரப்ப வேண்டும்.
* 50 வயதுக்கு உட்பட்ட நபர்கள் மட்டும் உண்டியல் திறப்பில் கலந்து கொள்ள வேண்டும். உண்டியல் திறப்பில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மற்றும் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் பரிசோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Up to 20 people over the age of 50 are not allowed to participate in the opening of the temple bank account as the corona infection is on the rise.
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...