×

5 மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியீடு தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கிறது: மே.வங்கத்தில் மீண்டும் திரிணாமுல்; கேரளாவில் கம்யூனிஸ்ட்; அசாமில் பாஜ; புதுவையில் என்ஆர் காங்கிரஸ் கூட்டணி

சென்னை: ஐந்து மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டன. தமிழகத்தில் திமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் மம்தாவும், கேரளாவில் பினராயி விஜயனும், அசாமில் பாஜவும் மீண்டும் ஆட்சியை தக்கவைக்கின்றன. புதுவையில் என்ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளன. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவைக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஆதி தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சி உள்ளிட்டவை ஒரு அணியாகவும், அதிமுக, பாஜ, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாகவும் அமமுக, தேமுதிக இன்னொரு அணியாகவும் போட்டியிட்டன.  

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இந்திய ஜனநாயக கட்சி, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி ஆகியவை இணைந்து ஒரு அணியாகவும் போட்டியிட்டன. சீமானின் நாம் தமிழர் கட்சி மட்டும் தனித்தே போட்டியிட்டது. இதனால் தமிழகத்தில் நடந்த தேர்தலில் 5 முனை போட்டி நிலவியது. மறைந்த தலைவர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் மறைவுக்கு பின்னர் நடந்த முதல் சட்டப்பேரவை தேர்தல் இதுவாகும். எனவே, எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள மொத்தம் 234 தொகுதிகளுக்கும் நடத்தப்பட்ட தேர்தலுக்கான முடிவுகள் வரும் மே 2ம் தேதி வெளியாகிறது.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் தமிழகத்தில் திமுக கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும் என சொல்லப்பட்டது. அதாவது, தேர்தலுக்கு முன்பே, பல்வேறு நிறுவனங்களின் கருத்து கணிப்புகள் வெளியாகி இருந்தன. அவைகளில் திமுகவுக்கே முதலிடம் என்றும் 150 பிளஸ் இடங்களை கண்டிப்பாக எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல, ஆளும் அதிமுக அரசுக்கு 70க்கும் குறைவான இடங்களில் மட்டுமே வெற்றி வாய்ப்பு என்று கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் மேற்குவங்கத்தில் கடைசி கட்ட தேர்தல் முடிந்ததால், 5 மாநில தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் தற்போது வெளியாகி இருக்கின்றன. தமிழகத்தில், திமுகவே ஆட்சியை பிடிக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் ரிபப்ளிக் - சிஎன்எக்ஸ் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில், திமுகவுக்கு 160 முதல் 170 வரை இடங்கள் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. அதிமுகவுக்கு 58 முதல் 68 வரை இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும், அமமுகவுக்கு 4 முதல் 6 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மநீமவுக்கு இரண்டு இடங்கள் கிடைக்க வாய்ப்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. ஏபிபி- சிவோட்டர் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், திமுக கூட்டணி கட்சிகள் 166 இடங்களிலும், அதிமுக கூட்டணி கட்சிகள் 64 இடங்களிலும் அமமுக 4 இடங்களிலும் வெற்றி பெறும் என சொல்லப்படுகிறது.

இந்தியா டுடே வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், திமுக கூட்டணி 175-195, அதிமுக 35-54 இடங்களும், இந்தியா அஹெட் நிறுவனத்தின் கருத்துக்கணிப்பில் திமுக 165-190 இடங்களும், அதிமுக 40-65 இடங்களிலும் வெற்றி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்படி தேர்தலுக்கு முன்பு பாஜவுக்கு ஒரு இடம்கூட கிடைக்காது என்றார்களோ, அதுபோலவே, இந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பிலும் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை பார்க்கும்போது, தமிழகத்தில் தனிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமையும் என்பதை பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன. 234 தொகுதிகளில் 160 தொகுதிகள் முதல் 195 தொகுதிகள் வரை திமுக கூட்டணி வெற்றிபெறும் எனக் கருத்து கணிப்புகள் கூறுகிறது.

இதில் காங்கிரஸ் உள்ளிட்ட இதர கூட்டணிக் கட்சிகளுக்கு 30 தொகுதிகள் வரை சென்று விட்டாலும் கூட குறைந்தது 135 முதல் 150 இடங்களிலாவது திமுக தனித்து வெற்றி பெறும் என்பதை கருத்துக்கணிப்பு முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. 118 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தாலே ஆட்சி அமைக்க முடியும் என்கிற சூழலில் கருத்துக்கணிப்பு முடிவுகளின் அடிப்படையில் திமுக இந்த முறை மெஜாரிட்டியாக ஆட்சி அமைக்கும் என்று தெரியவந்துள்ளது. எப்படிப் பார்த்தாலும் திமுக 163 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறும் என்பதை கருத்துக்கணிப்பு முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன. இதனால் திமுகவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசுக்கும், பாஜ.வுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வரும் மேற்கு வங்கத்தில்பெரும்பான்மை கணிப்புகள் திரிணாமுல்லுக்கே சாதகமாக இருக்கின்றன. இதன்மூலம், 3வது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது. கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில், 82 இடங்களை கைப்பற்றி முதல்வர் பினராய் விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.  அங்கு காங்கிரஸ் கூட்டணி 64 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது. அசாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் ஆளும் பாஜ 75 முதல் 85 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி 40 முதல் 50 இடங்களை மட்டுமே கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* சென்னையில் 11-13 தொகுதிகளில் திமுகவுக்கு வெற்றி
சென்னையில் திமுக மாபெரும் வெற்றியை பெறும் என்று ஏபிபி - சிவோட்டர் சர்வே தெரிவிக்கிறது. சென்னை மண்டலத்தில் மொத்தம் உள்ள 16 இடங்களில் திமுக 11 முதல் 13 இடங்களைக் வெல்லும் என்றும், அதிமுக 3 முதல் 5 தொகுதிகளைப் வெல்ல வாய்ப்புள்ளது என்றும், மற்ற கட்சிகள் எந்த இடத்திலும் வெற்றி பெற வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளது. சென்னையில் கடந்த தேர்தலை விட கூடுதலாக 2 இடங்களை திமுக பிடிக்க வாய்ப்புள்ளது. சென்னையில் திமுகவுக்கு வாக்கு சதவிகிதம் 40.6 ஆகவும், அதிமுக வாக்கு சதவிகிதம் 34.7 ஆகவும் இருக்கும் என்று கூறியுள்ளது. இதன் மூலம் சென்னையில் திமுக மாபெரும் வெற்றியை பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக ஏபிபி -சி வோட்டர் சர்வே தெரிவிக்கிறது.

Tags : Tamil Nadu ,Trinamul ,Kerala ,congress ,New , 5 Post-election polls release DMK rule in Tamil Nadu: Trinamool back in May; Communist in Kerala; Baja in Assam; NR Congress Alliance in New Delhi
× RELATED தமிழக – கேரள எல்லையில் முகாமிட்ட யானை உயிரிழப்பு