×

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பற்றாக்குறை-கூடுதலாக நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

திருப்பத்தூர் : திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால், கூடுதலாக மருத்துவர்கள் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என நோயாளிகள் எதிர்பார்க்கின்றனர். திருப்பத்தூரில் அரசு மருத்துவமனை உள்ளது. மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகும் இந்த அரசு மருத்துவமனை தாலுகா அரசு மருத்துவமனையாகவே செயல்பட்டு வருகிறது. திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு  3,500  புற நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

மேலும், 800க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், மாவட்ட அந்தஸ்துள்ள பெரிய மருத்துவமனையாக உள்ளது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா 2ம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 129 பேர் பலியாகியுள்ளனர்.

தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளொன்றுக்கு 150க்கும் மேற்பட்டோர் இந்த தொற்று ஏற்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் பல்வேறு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 2 தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் மற்றும் கொரோனா தடுப்பு சிகிச்சை மைய வார்டுகள் உள்ளது. இதில் தற்போது 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆக்சிஜன் லெவல் மற்றும் மிகவும் உடல்நிலை குறைவாக உள்ள 50க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும்  எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரு பகுதியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த அரசு மருத்துவமனையில் மொத்தம் 30 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். இதில் அறுவை சிகிச்சை, கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை, விபத்து சிகிச்சை உள்ளிட்டவைகளுக்கு பல்வேறு மருத்துவர்கள் சென்றுவிடுகின்றனர்.

இதனால், மருத்துவமனையில் உள்ள கொரானா சிகிச்சை மையத்தில் 6 மருத்துவர்கள் மட்டுமே 200 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். 6 மருத்துவர்கள் மட்டும் 200 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உள்ளதால் மருத்துவர்களாலும் முறையாக சிகிச்சை அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், வென்டிலேட்டர் மற்றும் ஆக்சிஜன் குறைபாடு உள்ள நோயாளிகளை அரை மணி நேரத்திற்கு ஒருமுறை மருத்துவர்கள்  கண்காணித்து, சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனால் மருத்துவர்கள் பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், `200 நோயாளிகளுக்கு 15 மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும். இந்நிலையில் நாங்கள் 6 மருத்துவர்கள் மட்டுமே காலை, மாலை, இரவு என்ற அடிப்படையில் 24 மணிநேரம் பணிபுரிந்து சிகிச்சை அளித்து வருகிறோம். இதனால், நாங்கள் மிகவும் மன அழுத்தத்தில் உள்ளோம். பணிச்சுமை எங்களை மிகவும் பாதிக்கிறது. எனினும் நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம் என்றனர்.

எனவே, கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் மாவட்ட அந்தஸ்துள்ள திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக மருத்துவர்களை அரசு நியமித்து கொரோனா நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நோயாளிகளுக்கு பிரியாணி விருந்து

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்ட அறிகுறி இல்லாமல் இருக்கும் நோயாளிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு மருத்துவமனை சார்பில் சிக்கன் பிரியாணி வாரந்தோறும் இரண்டு முறை வழங்கப்படுகிறது. மேலும் சத்தான தானியங்கள், விட்டமின் மாத்திரைகள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

கோரிக்கை மீது நடவடிக்கை இல்லை

அரசு மாவட்ட அந்தஸ்துள்ள இந்த மருத்துவமனைக்கு 30 மருத்துவர்கள் மட்டுமே இருந்தால் போதாது. மேலும், கூடுதலாக இன்னும் 30 மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் என்று ஏற்கனவே அரசிடம் பலமுறை மருத்துவ நிர்வாகம் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் அரசு எந்தவித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

Tags : Tirupati Government Hospital , Tirupati: There is a shortage of doctors at the Tirupati Government Hospital. Thus, government action to appoint additional doctors
× RELATED திருப்பதி அரசு மருத்துவமனையில்...