மேட்டுப்பாளையம் சாலையில் மேம்பால பணியில் அலட்சியம்-ராட்சத குழிகள், முறையான பாதுகாப்பு இல்லை

கோவை : கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் பெரியநாயக்கன்பாளையத்தில் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா முதல் சாமிசெட்டிபாளையம் பிரிவு வரை 1.4 கிலோ மீட்டர் நீளத்துக்கு, சுமார் ரூ.85 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டுமான பணி துவங்கி நடைபெற்று வருகிறது.

இதற்காக பெரியநாயக்கன்பாளையம் அருகே எல்.எம்.டபிள்யூ. பிரிவிலிருந்து சாமிசெட்டிபாளையம் பிரிவு வரை சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள், புளிய மரங்கள் அகற்றப்பட்டு தற்போது, மேம்பாலம் கட்டுமான பணி வேகமாக நடந்து வருகிறது.

எல்.எம்.டபிள்யூ. பிரிவு பெரியநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்ட், சாமிசெட்டிபாளையம் பிரிவு ஆகிய பகுதிகளில் தூண்கள் அமைக்க, ராட்சத குழிகள் தோண்டப்பட்டு உள்ளன. எல்.எம்.டபிள்யூ. பிரிவு பகுதியில் இருந்து சாமிசெட்டிபாளையம் வரை தூண்கள் அமைக்கும் பணி, வேகமாக நடந்து வருகிறது.  ராட்சத குழிகள் தோண்டப்பட்ட இடங்களில் மிகவும் அலட்சியமாக, முறையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.

ராட்சத குழிகளை ஒட்டியவாறுதான் வாகனங்கள் அனைத்தும் செல்கின்றன. பல ராட்சத குழிகள் அருகில் தடுப்புகள் போதுமான அளவு அமைக்கப்படவில்லை. அதேபோல் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சர்வீஸ் சாலை அமைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ஆனால் ஜல்லி கற்கள் கொட்டியதுடன் அப்பணி மந்தமடைந்துள்ளன.

இதனால் ராட்சத குழிகள் அருகில் ஜல்லி கற்கள் சாலையில் புழுதி பறக்க வாகனங்கள் செல்கின்றன. இரவு நேரங்கள் மற்றும் மழை காலங்களில் இதனால் ராட்சத குழிகளில் வாகனங்கள் விழுந்து உயிரிழப்பும் ஏற்படும் அபாயம் உள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘மேம்பால பணிக்காக ராட்சத குழிகள் தோண்டப்பட்டன. ஆனால் தடுப்புகள் முறையாக அமைக்கப்படவில்லை. உள்ளூர் தினமும் இவ்வழியாக சென்று வருவதால் மக்கள் இதனை அறிவார்கள். ஆனால் வெளியூர் நபர்கள் இவ்வழியாக வரும்போது ராட்சத குழிகளில் வாகனங்கள் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

சர்வீஸ் சாலை அமைக்கப்படாமல் வெறும் ஜல்லி கற்கள் கொட்டியவாறு பணிகள் நடக்கின்றன. இதனால் அப்பகுதியில் புழுதி காற்று பரக்கிறது. காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இந்த பெரியநாயக்கண்பாளையம் மேம்பாலம் நான்கு வழிச்சாலையாக, 17.5 மீட்டர் அகலத்துடன் அமைக்கப்படுகிறது. இன்னும் ஓராண்டுக்குள் மேம்பாலம் கட்டுமான பணி முழுவதுமாக கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. போதுமான பாதுகாப்பு உபகரணங்கள், ஏற்பாடுகளுடன் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது’’ என்றார்.

Related Stories:

>