×

குட்டத்து ஆவாரம்பட்டியில் அறுவடைக்கு தயாராகும் சூரியகாந்தி

திண்டுக்கல் :குட்டத்து ஆவாரம்பட்டி பகுதியில் சூரியகாந்தி பயிர்கள் அமோகமாக விளைந்து வித்துக்கள் உருவாகும் தருணத்தில் வளர்ந்துள்ளது. சூரியகாந்தி வித்தில் தயாராகும் எண்ணையின் தேவை அதிகமிருப்பதால் அதிகவிலை கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் காத்திருக்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் குட்டத்து ஆவாரம்பட்டி, கீழ்திப்பம்பட்டி, கிட்டம்பட்டி, வட்டப்பாறை, கன்னிவாடி, கசவனம்பட்டி ஆகிய பகுதிகளில் மானாவாரி விவசாயமே பிரதானமாக இருந்து வருகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் மழை பெய்யும் காலத்தையும், மழையின் அளவையும், பயிர்களுக்குரிய பருவத்தையும் கணக்கிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

சூரியகாந்தி பயிர் விளைச்சலுக்கு மழை பெய்தாலும், பெய்யாமல் போனாலும் பிரச்னை இல்லை. மேலும் சூரியகாந்தி பயிர்களின் வேர்கள் நிலத்தில் ஆழமாக செல்வதால் இருக்கின்ற ஈரப்பதத்திலேயே வளர்ச்சியடையும் தன்மை கொண்டது. குட்டத்து ஆவாரம்பட்டி பகுதியில் வழக்கம்போல் இந்தாண்டும் மழை பெய்வதுபோல் பெய்து விட்டு ஓய்வெடுத்துக்கொண்டது. இன்னும் ஒருசில இடங்களில் மானாவாரி பயிர்களுக்கு ஒத்துவராத அடைமழையாக பெய்து பாதிப்பை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் சூரியகாந்தி பயிரை தேர்ந்தெடுத்து பயிரிட்டுள்ளனர்.

பொதுவாக சூரியகாந்தி பயிர் 90 நாட்களில் மகசூல் கொடுக்கும் பயிராகவே இருந்து வந்தது. ஆனால் தற்போது இதிலும் நவீன யுக்தியை கொண்டு ஹைபிரேட் ஒட்டுரகம் என்றதொரு சூரியகாந்தி விதைகளை கண்டுபிடித்து 75 நாட்களில் மகசூல் கிடைக்கும் பயிராக மாற்றி இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். இவ்வாறு நவீன ஒட்டுரக சூரியகாந்தி பயிர்கள் மட்டுமின்றி அனைத்து வகையான சூரியகாந்தி பயிர்களுக்கும் பயிர் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு செலவுகள் மிகவும் குறைவு.

இந்தாண்டு பெரும்பாலான விவசாயிகள் வீரிய ஒட்டுரக சூரியகாந்தியையே பயிர் செய்துள்ளதால், தற்போது சுமார் 4 முதல் 5 அடிஉயரம் வரை சூரியகாந்தி செடிகள் வளர்ந்து பூக்கள் பிடித்துள்ளது. இந்த பூக்களின் மையப்பகுதியில் கிடைக்கும் வித்துக்கள் தற்போது உருவாகும் அறிகுறியுடன் செழுமையாக நிற்பதாக கூறுகின்றனர்.

விவசாயி ஜான் பீட்டர் கூறுகையில், தற்போதைய காலக்கட்டத்தில் சூரியகாந்தி எண்ணெய்க்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதால், அதன் தேவையும் அதிகரித்துள்ளது. தொடர்ந்து இன்னும் சில நாட்களில் வித்துக்கள் முழுமையாக உருவாகிய பின்னர், பூக்கள் வாடத்துவங்கி வித்துக்கள் முதிர்ச்சியடையும். இதையடுத்து அறுவடை செய்து மிஷின்களில் கொடுத்து வித்துக்களை மட்டும் பிரித்து விற்பனைக்கு அனுப்பும் பணிகள் துவங்கும்.
 ஏற்கனவே விலைவாசி அதிகரித்து வருவதாலும், தேவையை பொறுத்தும் கடந்தாண்டு விலையை விட, இந்தாண்டு கூடுதல் விலையே கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறினார்.

Tags : Kuttathu Avarampatti , Dindigul: In the Kuttathu Avarampatti area, sunflower crops are grown in abundance at the time of seed formation.
× RELATED குட்டத்து ஆவாரம்பட்டியில் அறுவடைக்கு தயாராகும் சூரியகாந்தி