×

மன்னார்குடி நகரில் அமைந்துள்ள பாசி படர்ந்த செங்குளம், நீர்வரும் வாய்க்கால்கள் தூர்வார வேண்டும்-சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

*இது உங்க ஏரியா

மன்னார்குடி : மன்னார்குடியில் பாசி படர்ந்த பழமையான செங்குளத்தை முழுமையாக தூர்வாரி அக்குளத்திற்கு தண்ணீர் வரும் கால்வாயை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.மன்னார்குடியில் நகராட்சிக்கு சொந்தமாக சுமார் 50க்கும் மேற்பட்ட குளங்கள், குட்டைகள் உள்ளன. மழைக் காலங்களில் நகர் முழுவதும் பெய்யும் மழைநீர் பல்வேறு வாய்க்கால்கள் மூலம் இக்குளங்களுக்கு வந்து சேரும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து மன்னார்குடியில் குடிநீர் பஞ்சம் ஏற்படாமல் இருந்து வந்தது.

இதில் மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் நகராட்சி அலுவலகம் ஆகியவற்றின் அருகில் நகரத்தில் உள்ள பெரிய குளங்களில் ஒன்றான செங்குளம் உள்ளது. இந்த குளத்திற்கு நீர் வரும் பாதை பல ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படாததால் காலப்போக்கில் பல்வேறு ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகி தூர்ந்து போய் முள் காடுகளாகவும், குப்பைகள் கொட்டும் இடமாகவும் மாறிவிட்டது.

இந்த குளத்தில் தற்போது மிக குறைந்த அளவு தண்ணீரே உள்ளது. அதிலும் பாசிகள் படர்ந்து மாசடைந்து கிடக்கிறது. மேலும் இக்குளத்திற்கு நீர்வரும் வாய்க்காலில் குடியிருப்புவாசிகள் சிலர் தங்கள் வீடுகளின் கழிவுநீரை கலப்பதால் குளத்தில் கடுமையான துர்நாற்றம் வீசுவதோடு பல்வேறு நோய்களை பரப்பும் இடமாக மாறி விட்டது. நகரத்தின் இதய பகுதியில் உள்ள செங்குளம் சீர்கெட்டு கிடப்பது குறித்து அதி காரிகள் உரிய கவனம் செலுத்தி செங்குளத்தை முழுமையாக தூர்வாரி அக்குளத்திற்கு நீர்வரும் வாய்க்காலையும் தூர்வாரி வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தில் நீரை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் மகேந்திரன், கம்பன், பரவை கார்த்திக் ஆகியோர் கூறுகையில், நகரத்தில் உள்ள குளங்கள் மற்றும் அதற்கு நீர்வரும் வாய்க்கால்கள் முறையாக பராமரிக்க படாததால் காலப் போக்கில் பல்வேறு ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகி பல குளங்கள் காணாமலே போய்விட்டது. வாய்க்கால்கள் சீரமைக்கப் படாததால் குளங்களுக்கு இயற்கையாக வரும் மழைநீர் தடைபட்டு நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது.

எனவே, நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செங்குளம் உள்ளிட்ட நகர் முழுவதும் உள்ள குளங்களை சர்வே எடுத்து அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி, முக்கியமாக அக்குளங்களுக்கு நீர்வரும் வாய்க்கால்களில் உள்ள குப்பைகளை அகற்றி வாய்க்கால்களை முறையாக குடிமராமத்து பணிகள் செய்து குளங்களுக்கு வரும் நீர் தங்குதடையின்றி வருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறினர்.

Tags : Mossy Chengulam ,Mannargudi , Mannargudi: Community activists in Mannargudi have demanded the complete removal of the old moss-covered red pond and the rehabilitation of the canal that brings water to the pond
× RELATED பறக்கும்படை சோதனையில் ரூ.64,390 பறிமுதல்