திருவாரூர் மாவட்டத்தில் 257 நெல் கொள்முதல் நிலையம் மூடல்-கோடை சாகுபடி விவசாயிகள் கடும் பாதிப்பு

*குரலற்றவர்களின் குரல்

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அடியோடு மூடப்பட்டதன் காரணமாக கோடை நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து நெல்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் கடந்த அக்.1ம் தேதி முதல் படிப்படியாக 486 கொள்முதல் நிலையங்கள் மாவட்டம் முழுவதும் இருந்து வரும் 8 தாலுகாவிலும் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டன. அதன்படி 6 லட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது வரையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வந்தது.

கடந்த மார்ச் மாதம் 486 கொள்முதல் நிலையங்களில் 229 கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டது. அதன் பின்னர் 257 கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வந்தன.

இந்நிலையில் நெல் வரத்து இல்லை என்று கூறி திருவாரூர் தாலுகாவில் இயங்கி வந்த கோமல், வைப்பூர், வஞ்சியூர், கல்லிக்குடி, பள்ளிவாரமங்கலம், நடப்பூர், அம்மையப்பன், அலிவலம், பழையவலம், வடகரை, குன்னியூர், பாலையூர், குளிக்கரை, தென்னவராயநல்லூர், துரைக்குடி, புலவநல்லூர், ஆமூர், புதூர், கீரங்குடி, ஓடாச்சேரி, தப்பளாம்புலியூர், சோழங்கநல்லூர் உட்பட 22 கிராமங்களில் இயங்கிவந்த கொள்முதல் நிலையங்கள் அனைத்தும் கடந்த 23ம் தேதி மூடப்பட்டன.

இதேபோல் நன்னிலம் தாலுகாவில் 41 கொள்முதல் நிலையங்கள், வலங்கைமானில் 41, குடவாசலில் 40, மன்னார்குடியில் 48, நீடாமங்கலத்தில் 10, கூத்தாநல்லூரில் 13, திருத்துறைப்பூண்டியில் 42 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 257 கொள்முதல் நிலையங்களும் மூடுவதற்கு நுகர்பொருள் வாணிப கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக குடோன்களுக்கு இயக்கம் செய்திட வேண்டும் எனவும், தராசு உள்ளிட்ட அனைத்து தளவாட பொருட்களையும் உடனடியாக ஒப்படைத்திட வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டு நிலையில் நடப்பது காரிப் பருவம் என்பது கடந்த அக்.1ம் தேதி துவங்கி வரும் செப்.30ந்தேதி முடிவடையும்.

ஆனால், இடைப்பட்ட காலத்தில் இதுபோன்று கொள்முதல் நிலையங்கள் அனைத்தும் அடியோடு மூடப்படுவதன் காரணமாக கோடை நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மன்னார்குடி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை நெல் சாகுபடி அறுவடை நடைபெற உள்ள நிலையில் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறந்திட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: