×

விந்தணு தானத்தில் விநோதம் 550 குழந்தைகளை பெற்றெடுக்க காரணமான தந்தை மீது வழக்கு: நெதர்லாந்தில் அதிர வைக்கும் சம்பவம்

தி ஹேக்: நெதர்லாந்தில் விந்தணு தானம் மூலம் 550 குழந்தைகளுக்கு ஒருவர் தந்தையாகி இருப்பதும், இதற்காக அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கும் சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர் ஜொனாதன் ஜேக்கப் மெய்ஜர் (வயது 41). தற்போது கென்யா நாட்டில் வசிக்கும் இவர் இசைக்கலைஞர். அதோடு, விந்தணு தானம் செய்பவரும் கூட. விந்தணு விற்பனை மூலம் நல்ல சம்பாத்தியம் கிடைத்ததால், கொஞ்சமல்ல, ரொம்பவே எல்லை மீறி விட்டார் மெய்ஜர். தனது விந்தணுவை விற்பதையே ஒரு தொழிலாக்கி, கடல் கடந்து வணிகம் செய்யவும் ஆரம்பித்து விட்டார்.

ஆன்லைன் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாக குழந்தையில்லாத பெற்றோர்களை தொடர்பு கொண்டு விந்தணு தானம் செய்துள்ளார். இதுமட்டுமின்றி விந்தணு நன்கொடை இணையதளங்கள் வாயிலாகவும் தனது தொழிலை விரிவுபடுத்தி உள்ளார். இவ்வாறாக மெய்ஜரின் விந்தணு தானம் மூலம் இப்போது வரை உலகெங்கிலும் குறைந்தது 550 குழந்தைகளுக்கு அவர் தந்தையாகி இருப்பார் என கருதப்படுகிறது. பணம் சம்பாதிக்க எப்படியெல்லாம் தினுசு, தினுசா யோசிக்கிறாங்க பார்த்தீர்களா? மெய்ஜரின் இந்த தில்லாங்கடியை வேலையை நெதர்லாந்தை சேர்ந்த டோனர்கைண்ட் என்ற அறக்கட்டளை கண்டுபிடித்து, இப்போது நெதர்லாந்தின் தி ஹேக் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

இது குறித்து அந்த அறக்கட்டளையின் தலைவரான டைஸ் வான் டெர் மீர் கூறுகையில், ‘‘மெய்ஜர் நெதர்லாந்து மற்றும் பல நாடுகளின் விந்தணு தான சட்டங்களை மீறி உள்ளார். அதிகபட்சம் 25 குழந்தைகளுக்கு தந்தையாக இருப்பேன் என அவர் கூறிய உறுதிமொழியை நம்பி பெற்றோர் பலர் ஏமாந்துள்ளனர். இவரது விந்தணு மூலம் பிறந்த சகோதர, சகோதரிகள் வெவ்வேறு பெற்றோருடன் இருப்பதால் தகாத உறவு முறை திருமணம் நடக்கும் அபாயமும் ஏற்படும். எனவே, மெய்ஜர் தனது விந்தணுக்களை எந்த கிளினிக்குகளுக்கு தானம் செய்துள்ளார் என்பதை அடையாளம் காணவும், அங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ள அவரது மாதிரிகளை அழிக்கவும் நீதிமன்றத்தை நாடி உள்ளோம்’’ என்றார்.

The post விந்தணு தானத்தில் விநோதம் 550 குழந்தைகளை பெற்றெடுக்க காரணமான தந்தை மீது வழக்கு: நெதர்லாந்தில் அதிர வைக்கும் சம்பவம் appeared first on Dinakaran.

Tags : Netherlands ,Dinakaran ,
× RELATED சில்லி பாய்ன்ட்…