×

கோவையில் அரசு தேர்வில் ஆள் மாறாட்டம் மோசடி கும்பலை பிடிக்க அரியானா விரைந்தது தனிப்படை

கோவை: கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் ஒன்றிய அரசின் வன மரபியல் மற்றும் மர பெருக்கு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்காக ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் இந்தியா முழுவதும் இருந்து ஆன்லைனில் ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். இந்த பணிக்கான எழுத்து தேர்வு கடந்த மாதம் 4ம் தேதி கோவையில் நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெற்றபோது தேர்வு எழுதிய 4 பேரின் போட்டோ, கைரேகை ஆகியவை மாறுபட்டிருந்தது. இது அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த 4 பேரையும் பிடித்து ஆங்கிலத்தில் எழுதுமாறும், பேசுமாறும் கூறினர். ஆனால் அவர்களால் பேசவும், எழுதவும் முடியவில்லை. தேர்வில் இவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். விசாரணையில், 4 பேரும் ஆள் மாறாட்டம் செய்து தங்களது பெயரில் வேறொருவரை வைத்து தேர்வு எழுதியது தெரியவந்தது.

இது குறித்து ஒன்றிய அரசின் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் இயக்குநர் குனிக்கண்ணன் சாயிபாபா காலனி போலீசில் புகார் அளித்தார். அதன்படி மோசடி, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது ஹரியானா மாநிலத்தை சேர்ந்த அமித் குமார் (30), இன்னொரு அமித்குமார் (26), அமித் (23), சுலைமான் (25) என தெரிய வந்தது. அவர்களை போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். இந்த மோசடிக்கு அரியானா மாநிலத்தை சேர்ந்த சிலர் உதவியாகவும், பல்வேறு பகுதியில் இவர்கள் ஒன்றிய அரசின் தேர்வில் மோசடிகளை நடத்தி வருவதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் நேற்று அரியானா சென்றனர். இந்த கும்பலை சேர்ந்தவர்கள் விரைவில் சிக்குவார்கள் என தெரிகிறது.

The post கோவையில் அரசு தேர்வில் ஆள் மாறாட்டம் மோசடி கும்பலை பிடிக்க அரியானா விரைந்தது தனிப்படை appeared first on Dinakaran.

Tags : Ariana ,Coimbatore ,Union Government Forest Genetics ,Tree Propagation Institute ,Mettupalayam Road, Coimbatore ,Dinakaran ,
× RELATED அரியானா சட்டப்பேரவையில் நடந்த...