×

ஆசிரியர்களுக்கு மானிய ஊதியம் தொடர்ந்து பெற்றுத்தர 2.50 லட்சம் லஞ்சம் வாங்கிய மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் கைது: இணை மறுவாழ்வு அலுவலரும் சிக்கினார்

நாமக்கல்: நாமக்கல்லில் ஆசிரியர்களுக்கு மானிய ஊதியம் தொடர்ந்து பெற்று தர 2.50 லட்சம் லஞ்சம் வாங்கிய மாவட்ட மாற்றுதிறனாளி நல அலுவலர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஸ்ரீ கம்பத்துக்காரர் சிறப்பு பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியின் தலைவராக விஜயகுமார் (43), செயலாளராக அவரது மனைவி உமா மகேஸ்வரி பொறுப்பு வகிக்கிறார்கள். இங்கு பணிபுரியும் 2 சிறப்பு ஆசிரியர்கள், ஒரு பிசியோதெரபிஸ்ட் ஆகியோருக்கு, 2020-21-ம் ஆண்டுக்கான மானிய ஊதியமாக 5 லட்சத்தை கடந்த மாதம் தமிழக அரசு அளித்துள்ளது. அந்த மானிய ஊதியம் தொடர்ந்து கிடைக்க 2.50 லட்சம் லஞ்சமாக தரும்படி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி, இணை மறுவாழ்வு அலுவலர் சேகர் ஆகியோர் பள்ளி நிர்வாகி விஜயகுமாரிடம் கேட்டுள்ளனர். தராவிட்டால், மானிய ஊதியத்தை நிறுத்த நடவடிக்கை எடுப்போம் என கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயகுமார், நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசாரின் ஆலோசனைப்படி, சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சேகர் வீட்டுக்கு நேற்று விஜயகுமார் சென்று, ₹2.50 லட்சம் வழங்கியுள்ளார். லஞ்ச பணத்தை பெற்றுக்கொண்ட சேகர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சியின் வீட்டுக்கு சென்று லஞ்ச பணத்தில் பாதியை கொடுத்துள்ளார். சேகரை தொடர்ந்து கண்காணித்து அவரின் பின்னால் சென்ற சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார், ஜான்சி (53), சேகர் (48) ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

Tags : District Rehabilitation Officer , District Rehabilitation Officer arrested for accepting bribe of Rs 2.50 lakh to continue to pay teachers' subsidy: Co-rehabilitation officer also caught
× RELATED ரேஷன் அரிசி, கோதுமை, பருப்பு, ஆயில் என...