திருச்செந்தூர் முருகன் கோயிலில் திடீரென வைக்கப்பட்ட இந்தி கல்வெட்டு: பக்தர்கள் அதிர்ச்சி

திருச்செந்தூர்: தமிழ்க்கடவுளான திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் திடீரென இந்தி மொழியில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டு பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம்படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு தமிழ் கடவுள் என்ற சிறப்பு உண்டு. அந்த சிறப்பை குறைக்கின்ற வகையில், இத்தனை ஆண்டுகளாய் இல்லாத இந்தி மொழி கல்வெட்டை திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில், கோயில் உள்ளிருந்து வெளிவரக்கூடிய வழியில் புதியதாக வைத்துள்ளனர். இதை கண்டு கோயிலுக்கு வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 எதற்காக இந்த கல்வெட்டு வைக்கப்பட்டது? இத்தனை ஆண்டுகளாய் இல்லாத இந்தி மொழி கல்வெட்டு, தற்போது அமைக்கப்படுவது ஏன்? என்ற கேள்வி பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தமிழ் தெரியாதவர்கள் கோயிலுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு கோயில் சிறப்பை விளக்க வேண்டும் என்று சொன்னால் ஆங்கிலத்தில் கல்வெட்டு அமைத்திருக்கலாம். அதைவிட்டுவிட்டு, காலம், காலமாக தமிழர்கள் எதிர்த்து வரும் இந்தி மொழியில் கல்வெட்டு அமைத்திருப்பது, உலகத்தமிழ் மக்களின் உணர்வுக்கு எதிரானது என பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுதவிர, தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கலெக்டருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘தமிழக அரசின் இரு மொழிக்கொள்கைக்கு எதிராக திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்தி மொழி கல்வெட்டை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

More
>